சாலைப் பாதுகாப்புக்குப் பங்களித்த தொழில்முறை ஓட்டுநர்களுக்கும் போக்குவரத்து நிறுவனங்களுக்கும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் காவல்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம், வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழகம் ஆகிய அமைப்புகள் உடனான கூட்டு முயற்சியுடன் சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மன்றமும் சிங்கப்பூர் மோட்டார் வாகனச் சங்கமும் விருதுகளை வழங்கின.
நிகழ்ச்சியில் பேசிய உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம், ஊழியர்களின் பாதுகாப்புக்கு நிறுவனங்கள் தலையாய முன்னுரிமை அளித்து, பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தி வந்திருப்பது தமக்கு மகிழ்ச்சி தருவதாகச் சொன்னார்.
பாதுகாப்புக்கு தாங்கள் முன்னுரிமை அளித்து வருவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி பஸ்ஸஸ் நிறுவனங்கள் கூறின.
விருது பெற்றவர்களில் ஒருவரான எஸ்எம்ஆர்டி பஸ்ஸஸ் பேருந்து ஓட்டுநர் தோ சின் தியோங், 58, கடந்த 27 ஆண்டுகளாக விபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக பேருந்து ஓட்டி வந்துளார்.
பேருந்து ஓட்டும்போது பொறுமையுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். வேக வரம்புகளை மீறாததும் மற்றவர்களுக்கு வழிவிடுவதும் முக்கியம் என்றார் அவர்.

