அக்டோபர் 28 முதல், சமூகத்தில் சளிக் காய்ச்சல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதை விரிவுபடுத்துவதற்கான சோதனை முறையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்கள் வருடாந்தர சளிக்காய்ச்சல் தடுப்பூசியைத் தீவு முழுவதும் உள்ள மூன்று சில்லறை மருந்தகங்களில் பெற முடியும்.
தடுப்பூசிகள் தொடக்கத்தில் மூன்று மருந்தகங்களில் கிடைக்கும். அவை நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள கார்டியன் மருந்தகம், பார்க்வே பரேட் கடைத்தொகுதியில் உள்ள யூனிட்டி மருந்தகம். பேரகான் கடைத்தொகுதியில் உள்ள வாட்சன்ஸ் மருந்தகம் என்று அக்டோபர் 28ஆம் தேதி சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
தடுப்பூசி சேவைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழலுக்கான சுகாதார அமைச்சின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை மருந்தகங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பங்கேற்கும் மருந்தகங்களில், சம்பந்தப்பட்ட பயிற்சியை முடித்த பதிவு செய்யப்பட்ட மருந்தாளர்கள் மட்டுமே சளிக் காய்ச்சல் தடுப்பூசியை வழங்க அனுமதிக்கப்படுவர்.
தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் 15 நிமிடங்களுக்குப் பிறகு, ஏற்படக்கூடிய பக்க விளைவுகளுக்கு மருந்தாளர்கள் சிகிச்சை அளிப்பதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள நெறிமுறைகளுடன் கண்காணிக்கப்படுவர்.
இந்தத் தடுப்பூசிகள் தனியார் பொதுநல மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் கூட கிடைக்கும்.
மேலும் ஆரோக்கியமான (ஹெல்தியர் எஸ்.ஜி) திட்டத்தில் ஏற்கெனவே சேர்ந்துள்ளவர்கள் உட்பட வழக்கமான தனியார் பொதுநல மருத்துவர் உள்ளவர்கள், தொடர்ந்து கவனிப்பை உறுதி செய்வதற்காக அவர்களது முதன்மைப் பராமரிப்பு வழங்குநரிடம் தடுப்பூசிகளைப் பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அமைச்சு அறிவுறுத்தியது.
பங்கேற்கும் மருந்தகத்தில் சளிக் காய்ச்சல் தடுப்பூசியைப் பெறும் தகுதியுள்ள சிங்கப்பூர் குடிமக்கள், சமூக சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) உள்ள தனியார் பொதுநல மருந்தகத்துக்குச் செல்வதற்கு அரசாங்கத்தின் மானியங்களைப் பெறுவார்கள் என்று அமைச்சு விவரித்தது.
அக்டோபர் 28 அன்று, பார்க்வே பரேட் கடைத்தொகுதியில் உள்ள யூனிட்டி மருந்தகத்தில் நடந்த இத்திட்டத்தில் தொடக்க விழாவின்போது, சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் சளிக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மற்ற வட்டார நாடுகளில், மக்கள் மருந்தகங்களில் தடுப்பூசிகளைப் பெறுவது வழக்கமாக உள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். பல மேற்கத்திய நாடுகளில் தொற்றுநோய்களின் போது கொவிட் -19 தடுப்பூசிகளுக்கான முக்கிய விநியோகத் தளங்களாக மருந்தகங்கள் விளங்கின என்றும் அவர் குறிப்பிட்டார்.