ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு (ஆர்டிஎஸ்) ரயில் திட்டத்தின் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ரயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ஆர்டிஎஸ் ஆபரேஷன்ஸ் (RTS Operations) நிறுவனம் ஜோகூர் பாருவின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் அலுவலகம் திறந்துள்ளது.
மெனாரா ஜேலாண்ட் ( Menara JLand) கட்டடத்தில் நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. அது ஜலான் வோங் ஆ ஃபூக்கில் உள்ள ஜோகூர் பாரு சோதனைச் சாவடி அருகே உள்ளது.
4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் சிறப்பாக நடந்து வருவதாகவும் அது திட்டமிட்டபடி 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவுக்கு வரும் என்றும் ஆர்டிஎஸ் ஆபரேஷன்ஸ் நம்பிக்கை தெரிவித்தது.
கிட்டத்தட்ட 45 விழுக்காட்டு செயல்பாட்டு வேலைகள் முடிந்துவிட்டன என்று ஆர்டிஎஸ் ஆபரேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கைரில் அன்வார் அகமது தெரிவித்தார்.
செயல்பாட்டு வேலைகளில் ரயில் தண்டவாளம், ரயில், ரயில் கட்டமைப்புகள் ஆகியவை உள்ளன.
ரயில் கட்டுமான வேலைகளை சிறப்பாக செய்துமுடிக்க புதிய அலுவலகம் அமைத்தது உதவியாக இருக்கும். மேலும் அது நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்று ஆர்டிஎஸ் ஆபரேஷன்ஸ் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்தது.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் சேவைக்கு வந்தால் ஒரு மணி நேரத்திற்கு இரு வழிகளிலும் கிட்டத்தட்ட 10,000 பயணிகள் பயணம் மேற்கொள்ள முடியும்.
தொடர்புடைய செய்திகள்
இதனால் சிங்கப்பூர் மலேசியா இடையிலான தரைவழியில் போக்குவரத்து நெரிசல் குறையும், வேகமாக பயணிகள் செல்லவும் உதவும்.
ஜோகூர் பாருவின் புக்கிட் சகாரில் ரயில் நிலையத்தில் இருந்து சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையம் வரை ரயில் சேவை இருக்கும்.
ஜோகூர் பாரு-சிங்கப்பூர் அதிவிரைவு திட்டம் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்திற்கும் பெரும் பலம் சேர்க்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

