காணாமல்போன காதொலிக் கருவியை வைத்திருந்த அதிகாரி கைது

1 mins read
8fa36e59-bde3-4df8-94f3-db3c204627d3
விமானப் பயணி தொலைத்த காதொலிக் கருவியை எடுத்துக் கொண்ட அதிகாரிமீது விரைவில் குற்றம்சாட்டப்படவிருக்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விமானப் பயணி ஒருவர் தொலைத்த காதொலிக் கருவியை தன்னிடம் வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் விமான நிலைய துணைக் காவல்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 7ஆம் தேதி அவர் மீது நம்பிக்கை மோசடி குற்றம் சாட்டப்படவிருக்கிறது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 5.35 மணியளவில் ஒரு திருட்டுச் சம்பவத்தை காவல்துறை விசாரித்தது. அதில், சாங்கி விமான நிலைய முனையம் 2ல் பணியாற்றும் 29 வயது துணைக் காவல்படை அதிகாரிக்குத் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த ஒருவர், ‘ஏர்பாட்ஸ்’ காதொலிக் கருவியை விமானத்தில் மறந்துவிட்டுச் சென்றுவிட்டார். விமான சிப்பந்திகளில் ஒருவர், அதை எடுத்து துணைக் காவல்படை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

ஆனால் காணாமல்போன பொருள்களை சேகரிக்கும் பிரிவில் தன்னிடமுள்ள வேறொரு காதொலிக் கருவியைக் கொடுத்துவிட்டு ஏர்பாட்சை தன்னிடம் வைத்துக் கொண்டார் அந்த அதிகாரி. காதொலிக் கருவியை பெற்றுக் கொள்வதற்காக அங்கு வந்த பயணி, அது தன்னுடையது அல்ல என்று புகார் செய்தார்.

இதையடுத்து அதிகாரியின் நிறுவனம் நடத்திய உள்விசாரனைக்குப் பிறகு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் துணைக் காவல் படை அதிகாரி, ஏர்பாட்சை எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. உடனே அவர் கைது செய்யப்பட்டார்.

அவர், மீது மார்ச் 7ஆம் தேதி குற்றம்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்