கேலாங் பகுதியில் காவல்துறை வாகனத்தை ஓட்டிய அதிகாரி, சட்டவிரோதமாகச் சாலையில் திரும்பியபோது அவ்வழியே முறையாக வந்த வாகனத்துடன் மோதி, அதனுள் இருந்த 54வயது மாதைக் காயப்படுத்தியுள்ளார்.
சம்பவம் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி இரவு 10.20 மணியளவில் நடந்துள்ளது. புவா பெங் சியான் என்ற அந்த 31 வயது அதிகாரி அப்பொழுது பணியில் இருந்துள்ளார்.
சாலையின் மற்ற பயனாளர்களைக் கவனத்தில் கொள்ளாமல் வாகனம் ஓட்டி கடுமையான காயங்கள் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட புவாவுக்கு 5 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்குத் தடையும் $5,000 அபராதமும் தண்டனையாக திங்கட்கிழமை (ஜனவரி 26) விதிக்கப்பட்டது.
ஓல்டு ஏர்போர்ட் சாலையை நோக்கிச் செல்லும் காசியா லிங்க்கின் இரண்டு தடங்கள் உள்ள சாலையின் இடது புறமாகச் சென்றுகொண்டிருந்த காவல்துறை வாகனத்தை அந்த அதிகாரி ஓட்டிக்கொண்டிருந்தார்.
போக்குவரத்து விளக்குகள் இல்லாத அந்தச் சாலையின் ஓர் இடத்தில் அவர் வாகனத்தை ‘யூ-டர்ன்’ என்ற முறையில் வளைத்துள்ளார். சரிவர கவனிக்காமல் அவர் மேற்கொண்ட அச்செயலால், அப்போது சாலையின் எதிர்ப்புறமாக வந்துகொண்டிருந்த வாகனத்தை அவர் மோத நேரிட்டது.
அதனால் அந்த வாகனத்துக்குள் இருந்த ஒரு மாதின் முகம் பின் இருக்கைமீது திடீரென மோதி வலது கண் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சையுடன், ஏழு நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. அவரது மருத்துவச் செலவான $7,000யை திரும்பப் பெறுவதற்கு அவர் தனிப்பட்ட கோரிக்கையை நீதிமன்றத்தில் வைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்து நடந்ததும் காவல்துறை அதிகாரி அவரது வாகனத்தை நிறுத்தி தேவையான உதவிகளை வழங்கியதால், அவரது தண்டனையின்போது அச்செயல் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டபோது, புவா காவல்துறையின் வேறு பிரிவுக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டதாக ஊடகத்திடம் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறை அவர்மீது மேலும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதா என்ற கேள்வியும் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

