சிங்கப்பூர் முழுவதும் நிலப் போக்குவரத்து ஆணையம் ஒரு வாரம் நடத்திய அமலாக்கச் சோதனையில் தகுதி இல்லாத 78 தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குடியிருப்புப் பகுதிகளில் தகுதி இல்லாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் ஏற்படும் தீச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சோதனையை அதிகாரிகள் நடத்தினர்.
விதிமுறைகளுக்கு உட்படாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பறிமுதல் செய்ய நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என்றும் பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களின் உரிமையாளர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்படும் என்றும் ஆணையம் வெள்ளிக்கிழமை (மே 23) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
மின்ஸ்கூட்டர்களையும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களையும் நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் பதிவுசெய்வது கட்டாயம். பதிவு செய்யாதவர்கள் நிலப் போக்குவரத்து ஆணையத்தை அணுகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விதிமுறைகளுக்கு உட்படாத தனிநபர் நடமாட்டச் சாதனங்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். அவற்றை வைத்திருப்போருக்கு 10,000 வெள்ளிவரை அபராதம் அல்லது ஆறு மாதம் வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தகுதி இல்லாத தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவை பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் நினைவூட்டினர்.
பொதுமக்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களையும் அவை சார்ந்த பொருள்களையும் உரிமம் உள்ள கடைகளில் மட்டும் வாங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சென்ற ஆண்டு தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் 67 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன. அதில் 44 சம்பவங்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2023ஆம் ஆண்டு தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் 55 தீச்சம்பவங்கள் ஏற்பட்டன.