சிங்கப்பூரில் 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களால் குழந்தைகள் கைவிடப்பட்ட சம்பவங்களில் ஆண்டுக்கு ஏறக்குறைய 539 சம்பவங்கள் மிகவும் மோசமானதாக இருந்ததால் குழந்தைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு சேவைப் பிரிவின் அதிகாரிகள் தலையிட வேண்டியிருந்தது.
குழந்தைகள், பச்சிளம் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச்செல்வது அல்லது பெற்றோர் குழந்தையின் மருத்துவ சிகிச்சைத் திட்டங்களைப் பின்பற்றாமல் கைவிடுவதால் குழந்தையின் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படுவது போன்றவை இத்தகைய சம்பவங்களில் அடங்கும்.
சில சம்பவங்களில் அதிகப்படியான பொருள்களைச் சேர்த்து வைத்தல், அளவுக்கு அதிகமான குப்பைகள் அல்லது எலிகளின் தொல்லை காரணமாக வீடுகள் பாதுகாப்பற்றதாகவும் சுகாதாரமற்றதாகவும் இருந்ததால் குழந்தைகள் நோயுற்றனர் அல்லது உடலில் புண்கள் மற்றும் தடிப்புகள் ஏற்பட்டன.
சமூக அமைப்புகள் தலையிட்டு முயற்சி செய்தாலும் பெற்றோரின் அலட்சியப் போக்கு தொடர்ந்ததாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
அதிக ஆபத்துள்ள சம்பவங்களை அமைச்சின் பாதுகாப்பு சேவைப் பிரிவு கையாண்டு வருகிறது.
பெற்றோரோ, பராமரிப்பாளரோ போதுமான உணவு, இருப்பிடம், பராமரிப்பு போன்ற வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளை குழந்தைக்கு வேண்டுமென்றே அல்லது நியாயமற்ற முறையில் வழங்கத் தவறினால் அல்லது வழங்க முடியாமல் போனால், அவர்கள் குழந்தையைப் பராமரிக்காமல் கைவிட்டதாகக் கருதப்படலாம் என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட அத்தகைய சம்பவங்களில் ஒன்று, 15 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையின் காய்கறிச் சந்தைக் கடையில் 11 மாதங்கள் வசித்து, கழிப்பறைக்குச் செல்வதற்குப் பதிலாக வாளிகளில் கழிப்பறைத் தேவைகளைக் கழித்த சம்பவமாகும்.
2024ஆம் ஆண்டில் சர்க்கிள் ரோடு சந்தை, உணவு மையத்தில் தேசிய சுற்றுப்புற வாரியம் வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டபோது அச்சிறுமியும் அவரது தந்தையும் சிறிய கடையில் வசித்து வந்தது தெரிய வந்தது.
இது குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் வாரியம் தகவல் அளித்ததைத் தொடர்ந்து அச்சிறுமி வளர்ப்புப் பெற்றோரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டார்.
2025ஆம் ஆண்டில் 63 வயதான அந்தத் தந்தைக்கு 24 மாத நிபந்தனை அடிப்படையிலான எச்சரிக்கை வழங்கப்பட்டது.
அதாவது, இக்காலகட்டத்தில் அவர் வேறு ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டால் அவர் செய்த பழைய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்படலாம்.
சிறுவர், இளையர் சட்டத்தின் கீழ், தங்கள் பராமரிப்பில் உள்ள குழந்தையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவர்களை நடத்தும் ஒருவருக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
