‘சிக்கி’ நூற்றாண்டு நினைவுச்சுவர் அதிகாரபூர்வமாக திறப்பு

2 mins read
eb5ee6b1-6827-41f8-900e-0f995050b703
‘சிக்கி’ நூற்றாண்டு நினைவுச்சுவரின் அதிகாரத்துவத் திறப்பு நிகழ்ச்சியில் கல்வி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங், ‘சிக்கி’ தலைவர் நீல் பரேக். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

தனது நூறாவது ஆண்டு நிறைவை எடுத்துக்காட்டும் நோக்கத்துடன் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை (சிக்கி) ஜனவரி 24ஆம் தேதி நூற்றாண்டு நினைவுச்சுவரை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்துள்ளது. 

சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி நிலையத்தின் மூன்றாம் தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் கலந்து கொண்டார். 

நிதி அமைச்சின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஹுவாங், கடந்த நூற்றாண்டில் சிங்கப்பூர் இந்திய வணிகச் சமூகத்தின் வளர்ச்சியையும் பங்களிப்புகளையும் எடுத்துக்காட்டும் ஒரு நினைவுச் சின்னமாக இந்தச் சுவர் விளங்குகிறது என்று சொன்னார். 

நாட்டின் பொருளியல் வளர்ச்சியில் இந்தியச் சமூகத்தின் நீடித்த தாக்கத்தைக் குறிப்பிடும் வகையில் இந்த நூற்றாண்டு நினைவுச்சுவர் அமைந்துள்ளது. 

சிக்கியின் தொடக்க காலம், அதில் பங்காற்றியோர், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதனுடைய முக்கிய ஈடுபாடுகள் போன்றவை நினைவுச்சுவரில் இடம்பெற்றுள்ளன. 

“கடந்த நூறு ஆண்டுகளில் இந்திய வணிகச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் சாதனை படைத்துள்ளனர். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு நம் இளம் தலைமுறை துடிப்புடன் செயலாற்றி, இந்திய வணிகச் சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்,” என்று சிக்கி நிர்வாகி தி. மோகன் கேட்டுக்கொண்டார். 

சிக்கியின் நூற்றாண்டு நினைவுச்சுவர் எதிர்காலத் தலைமுறைகளுக்கு வழிவகுத்துத் தந்த தொழில்முனைவோரின் கடின உழைப்புக்குச் சான்றாக அமையும் என்று சிக்கியின் தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான நீல் பரேக் குறிப்பிட்டார்.

சிக்கியின் நூற்றாண்டு நினைவுச் சுவர் பொதுமக்கள் பார்வைக்காக இவ்வாண்டு இறுதிவரை சன்டெக் சிங்கப்பூர் மாநாடு, கண்காட்சி நிலையத்தின் மூன்றாம் தளத்தில் திறந்திருக்கும். 

குறிப்புச் சொற்கள்