பாதசாரிகளுக்கான ஒரு மேம்பாலத்தில் சைக்கிளோட்டிய முதியவர் ஒருவர் நிலப் போக்குவரத்து அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) அல்ஜுனிட் கிரசென்ட் புளோக் 95 அருகில் நடந்த இச்சம்பவத்தில் அந்த முதியவர் அதிகாரிகளுக்கு முன் மண்டியிட்டு கெஞ்சுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சம்பந்தப்பட்ட தமது அதிகாரிகள் கனிவன்பைக் கடைப்பிடித்திருக்கலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையப் (எல்டிஏ) பேச்சாளர் கருத்துரைத்தார்.
மஞ்சள் நிற மேலாடை அணிந்த ஒரு மாது, மண்டியிட்ட நிலையில் நிலப் போக்குவரத்து அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட இருவரிடம் அருகே இருந்த சைக்கிளை நோக்கி கையசைத்துக் காட்டுவது காணொளியில் தெரிந்தது.
அந்த முதிய சைக்கிளோட்டிக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து தாம் அனுதாபம் கொள்வதாக நிலப் போக்குவரத்து ஆணையப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.
இடவசதி அதிகம் இல்லாததால் பாதசாரிகளின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மட்டும் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் மற்ற தேவைகளுக்கு ஆனதல்ல.
எனவே, மேம்பாலங்களில் சைக்கிள்களிலிருந்து அதன் ஓட்டுநர்கள் இறங்கி அவற்றை தள்ளிக் கொண்டு செல்லவேண்டும். பாதசாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் மேம்பாலங்களில் சைக்கிள் ஓட்டுவது குற்றமாகும் என்பதையும் அவர் விளக்கினார்.
“பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்துடன் சட்டப்படி அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்ட எங்களது அதிகாரிகள் அவர்களது கடமையைச் செய்துள்ளனர்,” எனவும் அவர் தெரிவித்தார்.


