தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய் குழாய் கசிவு: சுத்தம் செய்வது வரும் நாள்களில் நிறைவுபெறும்

2 mins read
6dba1ee2-0105-44e1-966e-e6cc2a1efeb8
புக்கோம் தீவின் கடற்பகுதி. - படம்: கடல்துறை, துறைமுக ஆணையம்

ஷெல் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட எண்ணெய் கசிவைத் தொடர்ந்து கடற்பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணியை வரும் நாள்களில் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (அக் 22) தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை கடலிலோ அல்லது அதன் கரையிலோ வேறு எண்ணெய்த் திட்டுகள் தென்படவில்லை.

நிலைமை குறித்த சிங்கப்பூர் அமைப்புகளின் ஆகக் கடைசி கூட்டறிக்கையில், புலாவ் புக்கோம் மற்றும் புக்கோம் கெச்சில் தீவுகளுக்கு இடையே உள்ள கால்வாயில் எண்ணெய்யைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது.

“கால்வாயில் உள்ள கட்டுப்பாட்டு வட்டத்துக்குள் சிக்கியுள்ள மீதமுள்ள எண்ணெயை அகற்றுவது மற்றும் கறை படிந்த பாறைகள், உள்கட்டமைப்புகளைச் சுத்தம் செய்வது போன்றவற்றை வரும் நாள்களில் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது,” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, புக்கோம் தீவுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடையே ஷெல்லின் நிலம் சார்ந்த எண்ணெய்க் குழாயில் இருந்து கசிவு ஏற்பட்ட பிறகு எண்ணெய் கசிவு தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.

திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஷெல் நிறுவனம், “சுமார் 30 முதல் 40 மெட்ரிக் டன் “ஸ்லோப்” எனப்படும் எண்ணெய் மற்றும் தண்ணீரின் கலவை கடலில் கசிந்துள்ளது என்று தெரிவித்தது.

“தொடர்ந்து சுத்தப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, எண்ணெய்யைக் கட்டுப்படுத்துவதற்கும் அதனை உடைப்பதற்கும் கட்டுப்பாட்டுக் கருவிகள், மாசு எதிர்ப்பு பொருள்கள், திட்டுகளைச் சிதற வைக்கும் தெளிப்பான்கள் ஆகியவற்றை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்,” என்று நிறுவனம் கூறியது.

செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில், பொதுப் பயனீட்டுக் கழகம் அதன் உப்புநீக்க ஆலைகளில் கடல் நீர் உட்கொள்ளளவைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்று கூறியது.

கடல் நீரின் தர அளவீடுகள் வழக்க நிலையில் உள்ளன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

“எண்ணெய் கசிவால் மீன் பண்ணைகள் பாதிக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. எண்ணெய் தென்படுதலை அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கும்,” என்றும் கூறப்பட்டது.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், செந்தோசா மேம்பாட்டுக் கழகம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிங்கப்பூர் நில ஆணையம், ஜூரோங் நகராண்மைக் கழகம், கட்டட, கட்டுமான ஆணையம் ஆகியவை கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

குறிப்புச் சொற்கள்