ஈரான் போர் குறித்துச் சம்பந்தப்பட்ட நாடுகளின் மிரட்டல்கள் தொடர்வதோடு பூசல் நீடிக்கும் என்ற அச்சம் நிலவுவதால், எண்ணெய் விலை ஏற்றம் கண்டுள்ளது.
அவசரகால நடவடிக்கையாக உலகின் செல்வம் நிறைந்த நாடுகள் அவற்றின் இருப்புகளை விடுவித்தாலும் எண்ணெய் விலையேற்றத்தை தடுக்க முடியவில்லை. எண்ணெய் இருப்புகளை விடுவிக்கும் நாடுகளில் அமெரிக்காவும் அனைத்துலக எரிசக்தி அமைப்பு (IEA) உறுப்பு நாடுகளும் அடங்கும்.
சிங்கப்பூரில் வியாழக்கிழமை (மார்ச் 12) பிற்பகலுக்குப் பிறகு, விலையின் உலக அளவுகோலான ‘பிரென்ட்’ வகை கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 10 விழுக்காடு உயர்ந்து S$129.57 (US$101.59) என்ற விலையை எட்டியது. அமெரிக்க எண்ணெய்க் குறியீடான ‘யுஎஸ் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியெட்’ S$119.61 (US$93.78) என்ற விலையை அடைந்தது. இரு குறியீடுகளும் புதன்கிழமை நிலவரப்படி 5 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளன.
இதற்கிடையே எண்ணெய் விலை பீப்பாய்க்கு S$255.23 (US$200) வரை எட்டுவதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று ஈரான் எச்சரித்தது. அத்துடன் வளைகுடா கடற்பகுதியை வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியாதபடி அங்கு தாக்குதல்களை ஈரான் நடத்திவருகிறது.
எதிர்காலத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கமாட்டோம் என்ற உறுதியளித்தால் மட்டுமே சண்டை நிறுத்தத்திற்கு உடன்பட முடியும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
அதனால் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை வலுவிழந்துள்ளது. அவசரகால எண்ணெய் இருப்புகளை விடுவிக்க ஜப்பான் (80 மில்லியன் பீப்பாய்), பிரிட்டன் (13.5 மில்லியன் பீப்பாய்), தென்கொரியா (22.5 மில்லியன் பீப்பாய்) ஆகிய நாடுகள் தயாராகிவருகின்றன.
கனடா அதன் எண்ணெய் நிறுவனங்களின் இருப்புகளை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. ஆஸ்திரேலிய நிறுவனங்கள், குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எண்ணெய் விற்பனையைக் கட்டுப்படுத்தியுள்ளன.

