மத்திய கிழக்குப் பூசலால் சிங்கப்பூரில் பெட்ரோல் விலைகள் கூடியுள்ளன. எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஷெல் நிறுவனம் அதன் 95-ஆக்டேன் வகை எரிபொருளின் விலையை நான்கு காசு உயர்த்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) காலையில் அதன் விலை லிட்டருக்கு $2.92ஆக இருந்தது.
நண்பகலுக்குப் பிறகு கால்டெக்ஸ் நிறுவனமும் ஷெல்லுக்கு நிகராக விலைகளை ஏற்றியது. எஸ்ஸோவும் அதனைப் பின்பற்றியது. சினோப்பெக் சில மணிநேரங்களுக்குப் பின்னர் விலையை உயர்த்தியது.
எஸ்பிசி மட்டுமே நாள் முழுதும் 95-ஆக்டேன் வகை பெட்ரோலின் விலையைத் தொடர்ந்து $2.87ஆகவே வைத்திருந்தது.
புதன்கிழமை காலை நிலவரப்படி, பெட்ரோல் விலைகளை அது மாற்றவில்லை என்று ‘பிரைஸ் காக்கி’ செயலி கூறுகிறது.
தற்போது எஸ்பிசி மட்டுமே 92-ஆக்டேன் வகை பெட்ரோலின் விலையை $2.84ஆக வைத்துள்ளது. எஸ்ஸோவும் கால்டெக்சும் அதனை $2.88க்கு அதிகரித்துள்ளன. ஷெல்லும் சினோப்பெக்கும் அந்த வகை பெட்ரோலை வழங்கவில்லை.
எஸ்பிசி, வழக்கமான 98-ஆக்டேன் வகை பெட்ரோலை ஆகக் குறைந்த விலைக்கு விற்கிறது. அது இப்போது $3.38ஆக உள்ளது. எஸ்ஸோவும் சினோப்பெக்கும் விற்கும் அவ்வகை பெட்ரோலின் விலை $3.42. ஷெல்லில் அந்த வகை பெட்ரோலின் விலை ஆக அதிகமாக உள்ளது. இப்போது அது $3.44ற்கு விற்கப்படுகிறது.
98-ஆக்டேன் வகை பெட்ரோலின் விலை சினோப்பெக்கில் ஆகக் குறைவாக உள்ளது. அங்கு அது $3.55க்கு விற்கப்படுகிறது. ஷெல்லில் அதன் விலை $3.66.
தொடர்புடைய செய்திகள்
விலையேற்றத்தால் சரக்கு வாகனங்களின் உரிமையாளர்களும் டாக்சி ஓட்டுநர்களும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விலையும் கூடியிருப்பது அதற்குக் காரணம். ஷெல், எஸ்ஸோ, கால்டெக்ஸ் ஆகியவற்றில் அது ஆக அதிகமாக உள்ளது. அங்கு டீசல் விலை லிட்டருக்கு $2.70ஆக இருக்கிறது. எஸ்பிசியில் அது ஆகக் குறைவாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் டீசல் $2.57க்கு விற்கப்படுகிறது.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்ததைத் தொடர்ந்து உலக அளவில் எரிசக்தி விலைகள் ஏற்றம் கண்டுவருகின்றன.

