சிங்கப்பூரில் ஜூன் 14ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை அடுத்து கடலில் கசிந்த எண்ணெய்யைத் துப்புரவு செய்யும் ‘ஸ்கிம்மர்’ இயந்திரங்களை மறுநாள் காலைதான் பயன்படுத்த முடிந்ததாக கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
தெளிவாகப் பார்க்கும் தொலைவு பாதிக்கப்பட்டது அதற்குக் காரணம்.
ஆணையம் பன்முறை அணுகுமுறையைக் கையாண்டபோதும் பெரிய எண்ணெய்ப் படலங்கள் காணப்பட்ட இடங்களை உறுதிசெய்வது சவாலாக இருந்ததாகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.
ஆளில்லா வானூர்திகளையும் செயற்கைக்கோள் படங்களையும் பயன்படுத்தியதுடன் கடலில் இருந்த கப்பல்களிலிருந்தும் நிலப் பரப்பிலிருந்தும் பார்த்தும் எண்ணெய்ப் படலம் காணப்பட்ட இடங்கள் உறுதிசெய்யப்பட்டன என்றார் அவர்.
400 டன் எண்ணெய் கடலில் கசிந்த சம்பவத்தை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 23 பேர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஜூலை 2ஆம் தேதி அவர் தாக்கல் செய்தார்.
ஜூன் 14ஆம் தேதி பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஆணையமும் அதன் குத்தகை நிறுவனங்களும் எண்ணெய்ப் படலங்களைச் சரியாகப் பார்க்க முடியவில்லை என்பதை அமைச்சர் சுட்டினார்.
ஆணையத்தின் சுற்றுக்காவல் படகில் இருந்த எடைகுறைந்த தடுப்புகளைக்கொண்டு இத்தகைய பேரளவிலான எண்ணெய்க் கசிவைத் துப்புரவு செய்ய இயலாது என்றார் அவர். எனவே அனைத்துலக நடைமுறைக்கேற்ப அது, எண்ணெய்ப் படலம் கெட்டியாகாமல் தடுக்கும் கலவையைத் தெளிக்கும் பணியில் ஈடுபட்டது.
“அனைத்துலக வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி நமது துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எண்ணெய்க் கசிவுச் சம்பவங்களைத் திறம்படக் கையாண்ட அனுபவமிக்க நிறுவனங்களுடன் இதன் தொடர்பில் சிங்கப்பூர் அமைப்புகள் அணுக்கமாகப் பணியாற்றுகின்றன,” என்றார் அமைச்சர்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்களுக்கு அரசாங்கம் இதுகுறித்துத் தகவல் தந்தது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, சம்பவம் நடந்த முதல் நான்கு நாள்களில் பொதுமக்களின் கவலையைக் கருத்தில்கொண்டு அரசாங்க அமைப்புகள் ஐந்து ஊடக அறிக்கைகளை வெளியிட்டதாக அவர் கூறினார். சமூக ஊடகங்களிலும் அவை பதிவேற்றப்பட்டன.
முதற்கட்டத் துப்புரவுப் பணிகள் நிறைவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், லேப்ரடார் இயற்கைவளப் பகுதி, செந்தோசா, சதர்ன் தீவுகளின் சில பகுதிகள் ஆகியவற்றில் உள்ள அரிய உயிரின வாழ்விடங்களில் எண்ணெய்த் திட்டுகள் காணப்பட்டதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஜூலை 2ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
லேப்ரடார் இயற்கைவளப் பகுதியின் அரிய பாறைகள் நிரம்பிய கடற்கரை, செந்தோசாவின் தஞ்சோங் ரிமாவ், செரபாங் பகுதிகள், செயின்ட் ஜான்’ஸ் மற்றும் லாசரஸ் தீவுகளின் பெண்டெரா பே, ஈகிள் பே ஆகிய இரண்டு காயல்கள் போன்றவை பாதிக்கப்பட்டன.
ஜூன் 16ஆம் தேதிக்கும் 25ஆம் தேதிக்கும் இடையில் அதிகாரிகள், அறிவியலாளர்கள், கடல்துறையினர் ஆகியோர் நடத்திய ஆய்வுகளில் இது தெரியவந்தது.
அண்மைய எண்ணெய்க் கசிவால் இங்குள்ள கடல்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகளிடையே குறிப்பிடத்தக்க தாக்கம் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் நீண்டகால அடிப்படையில் தாக்கம் ஏற்படக்கூடும் என்று அமைச்சர் லீ கூறினார்.
எண்ணெய்க் கசிவால் சிங்கப்பூரின் கடல்வாழ் உயிரினச் சூழலில் ஏற்பட்ட தாக்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதிகாரிகள் நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றார் அவர்.