தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கோம் தீவுக்கரையில் எண்ணெய்க் கசிவு; துப்புரவு நடவடிக்கை முடிவுக்கு வந்தது

2 mins read
cf11d69f-f226-4fe6-88bb-e05c98715011
எண்ணெய்க் கசிவைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27ஆம் தேதி) துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. - படம்: ஷெல் நிறுவனம்

புக்கோம் தீவுக்கரையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்புரவு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிங்கப்பூர் கடல் துறை, துறைமுக ஆணையமும் தேசிய சுற்றுப்புற வாரியமும் தேய பூங்காக் கழகமும் வெளியிட்ட கூட்டறிக்கையில், எண்ணெய்க் கசிவு எங்கிருந்து ஆரம்பமானது என்பது பற்றி ஷெல் நிறுவனம் விசாரித்து வருவதாக தெரிவித்தன.

“எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்த கூடுதல் எண்ணெய் உறிஞ்சி மிதவைகள் எச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன,” என்று அந்த கூட்டறிக்கை விளக்கியது.

குளிர் நீர் வெளியேற்றப் பகுதியில் எண்ணெய்க் கசிவு தற்பொழுது இல்லை என்றும் அறிக்கை விவரித்தது.

ஷெல் எரிசக்தி, ரசாயனப் பூங்காவில் இருந்து வியாழக்கிழமை (டிசம்பர் 26ஆம் தேதி) சில டன் அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஷெல் நிறுவனம் அந்த சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடியது.

அதே நாள் காலையில் புக்கோம் தீவுக்கு அருகே எண்ணெய் திட்டுகள் தென்பட்டதாக ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அன்று பிற்பகல் 12.15 மணிக்கு துறைமுக ஆணையம் சூழ்நிலையை மதிப்பீடு செய்யவும் ஆதரவு வழங்கவும் தனது கலன் ஒன்றை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது.

பின்னர் ஷெல் நிறுவனம் துப்புரவு நடவடிக்கையை துரிதப்படுத்த உதவி கோரியதை அடுத்து வெள்ளிக்கிழமை ஆணையம் மூன்று கலன்களை துப்புரவுப் பணிக்காக அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையமும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்