சாங்கி கடற்பகுதியில் அக்டோபர் 28ஆம் தேதியன்று எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
பஹாமாசைச் சேர்ந்த கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்துகொண்டிருந்தபோது கடலில் எண்ணெய் கசிந்தது.
எரிபொருள் நிரப்பும் உரிமம் கொண்ட கப்பல், ‘இனஸ் கொராடோ’ என்ற பெயரைக் கொண்ட அந்த பஹாமாஸ் கப்பலுக்கு எரிபொருள் நிரப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
எண்ணெய்க் கசிவு மாலை 5.40 மணி அளவில் நிகழ்ந்ததாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை அறிக்கை வெளியிட்டது.
கடலில் எண்ணெய் கசிந்ததை அடுத்து, கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாலை 5.50 மணி அளவில் ஆணையத்துக்குச் சொந்தமான படகு சம்பவ இடத்துக்கு விரைந்து கடலில் கசிந்த எண்ணெய்யைச் சிதறடிக்கும் பணிகளில் ஈடுபட்டது.
இந்தச் சிதறடிக்கும் பணிகள் மூலம் கடலில் கசிந்த எண்ணெய் சிறு துளிகளாகப் உடைக்கப்படும்.
அவ்வாறு சிறு துளிகளாக உடையும் எண்ணெய்த் துளிகள் கடல்நீருடன் கலந்துவிடும்.
தொடர்புடைய செய்திகள்
ஏறத்தாழ 5 டன் எண்ணெய் கடலில் கசிந்ததாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 29ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, சாங்கி கடற்பகுதியிலும் கடற்கரையிலும் எண்ணெய்த் திட்டுகளைப் பார்க்க முடியவில்லை என்று ஆணையம் கூறியது.
இருப்பினும், மலேசிய அதிகாரிகளுக்கு இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
கடலில் எண்ணெய்த் திட்டுகள் உள்ளனவா என்பதை அவர்களும் கண்காணிப்பர் என்று ஆணையம் கூறியது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடல்நீரில் எண்ணெய்த் திட்டுகள் காணப்பட்டால் அவற்றை அகற்ற கலம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
இதற்கிடையே, எண்ணெய்க் கசிவு காரணமாக சாங்கி கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று ஆணையம் கூறியது.