பாறை இடுக்குகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

பாறை இடுக்குகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

2 mins read
36af8322-2dde-4e0a-ae31-7edf8f9d3193
பாறை இடுக்குகளில் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளின் முதற்கட்டத்தைவிட இரண்டாவது கட்டம் சற்று சவாலாக உள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செந்தோசா கடற்கரைகளில் எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட பாறை இடுக்குகளை சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

“செந்தோவில் உள்ள மூன்று கடற்கரைகளில் தஞ்சோங் கடற்கரை எண்ணெய்க் கசிவால் அதிக பாதிப்புக்குள்ளானது. எண்ணெய்ப் படிவங்களையும் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட மணலையும் சுத்தம் செய்வதில் முழுகவனம் செலுத்தி வருவதாக,” கிரேஸ் ஃபூ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) பதிவிட்டார்.

சுத்திகரிப்பு பணிகளை அமைச்சர் கிரேஸ் ஃபூ, வர்த்தக, தொழில் அமைச்சின் துணை அமைச்சர் ஆல்வின் டானுடன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

பாறை இடுக்குகளில் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளின் முதற்கட்டத்தைவிட இரண்டாவது கட்டம் சற்று சவாலான ஒன்று. பாறை இடுக்குகள் வழுக்கும் தன்மை கொண்டதாகவும் மேடும் பள்ளமுமாக இருப்பதாகவும் கிரேஸ் ஃபூ குறிப்பிட்டார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் தொடங்கப்பட்ட சுத்திகரிப்பு பணிகளில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில் ஜோகூர் கடலோரத்தில் 43 டன்களுக்கு மேலான எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஜோகூர் கடலோரத்தில் சுத்திகரிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சதுப்புநிலம் மற்றும் பாறை பகுதிகளில் மட்டும் எண்ணெய்ப் படலங்களை அகற்றுவதில் சவாலை சந்திப்பதாக ஜோகூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மாதம் 14ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் முனையத்தில் 400 மெட்ரிக் டன் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அலை நீரோட்டத்தால் செந்தோசா, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லெப்ரடோர் வனப்பகுதி, தென் தீவுகள், மரினா சவுத் படகுத்துறை ஆகிய பகுதிகளை எண்ணெய்க் கசிவு சென்றடைந்தது.

இதையடுத்து சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், தேசியப் பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், செந்தோசா மேம்பாட்டு நிறுவனம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்