சிங்கப்பூர் பல ஆண்டுகளில் கண்டிராத மோசமான எண்ணெய்க் கசிவு சம்பவம் தொடர்பில் டச்சு ஆடவர் நால்வருக்கு (ஏப்ரல் 2) அபராதம் விதிக்கப்பட்டது.
அந்நால்வரும் நெதர்லாந்தைச் சேர்ந்த வோக்ஸ் மேக்சிமா எனும் தூர்வாரும் கப்பலின் ஊழியர்கள்.
அந்தக் கப்பல் சென்ற ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நங்கூரமிட்டிருந்த சிங்கப்பூர்க் கப்பல்மீது மோதியதில் கடலில் எண்ணெய் கசிந்தது.
கப்பலில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த மூன்றாம் பொறியாளர் மெரைன் ஹெய்டெமா, 26, இரண்டாம் பொறியாளர் எரிக் பெய்ஜ்பெர்ஸ், 56, என்ற இருவருக்கும் $40,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வோக்ஸ் மேக்சிமா கப்பலின் மாலுமியான 49 வயது ரிச்சர்ட் ஔவிஹென்டுக்கும் கப்பலின் தலைமை அதிகாரி 48 வயது மார்ட்டின் ஹன்ஸ் சின்கெவுக்கும் $20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திரு மார்ட்டின் கப்பல் எந்தத் திசையில் செல்கிறது என்பதைக் கண்காணிக்கும் பணியிலும் இருந்தார்.
வணிகக் கப்பல் சட்டம் 1995இன் கீழ் ஒவ்வோர் ஆடவர்மீதும் சம்பவம் தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சென்ற மாதம் 12ஆம் தேதி அவர்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதோடு, சரிவர பணியை நிறைவேற்றவில்லை என்ற குற்றத்தையும் ஒப்புக்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நின்றுகொண்டிருந்த சிங்கப்பூருக்குச் சொந்தமான மரின் ஹானர் கப்பல்மீது வோக்ஸ் மேக்சிமா மோதியது. அதில் 400 டன் எண்ணெய் கடலில் கசிந்தது.
தொடர்புடைய செய்திகள்
கடலில் பரவிய எண்ணெய் பின் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லேப்ரடார் இயற்கைப் பூங்கா, செந்தோசா ஆகிய கடற்கரைகளில் படிந்தது. ஜோகூரின் கோத்தா திங்கி வரையும் எண்ணெய் படர்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கரை ஒதுங்கிய எண்ணெய்ப் படலத்தைச் சுத்தப்படுத்த 2 மாதங்களுக்கும் மேல் ஆனது என்று அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
அதோடு, சேதமடைந்த மரின் ஹானர் கப்பல் $6.6 மில்லியன் செலவில் இன்னமும் பழுதுபார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

