சிங்கப்பூர்க் கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) அதிகாலை எண்ணெய்க் கசிவுச் சம்பவம் நடந்ததாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
ஷெல் நிறுவனத்தின் தரைவழிக் குழாயிலிருந்து காலை 5.30 மணியளவில் கடல்நீருக்குள் எண்ணெய் கசிந்ததாகக் கூறப்படுகிறது.
புக்கோம் தீவுக்கும் புக்கோம் கெச்சிலுக்கும் இடையே அமைந்துள்ள அந்தக் குழாயிலிருந்து எண்ணெய் கசிந்தது குறித்து ஆணையத்திற்குப் பிற்பகல் 1 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பிற்பகல் 3 மணியளவில் எண்ணெய்க் கசிவு நிறுத்தப்பட்டதாக ஷெல் நிறுவனப் பேச்சாளர் கூறினார்.
புதிதாக எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதுமில்லை என்று ஆணையம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அறிக்கை விடுத்தது.
ஆணையத்துடன் ஷெல் நிறுவனமும் இணைந்து எண்ணெய்ப் படலங்களை அகற்றப் படகுகளை அனுப்பியதாகக் கூறப்பட்டது.
மேலும், கசிவு ஏற்பட்ட இடத்தைச் சுற்றி எண்ணெய்யைக் கட்டுப்படுத்துவதற்கான மிதவைகளையும் ஷெல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, எண்ணெய்ப் படலங்களைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகளையும் செயற்கைக்கோள் கருவிகளையும் ஆணையம் முடுக்கிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள் அனைத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் எண்ணெய்ப் படலங்கள் கண்ணில் பட்டால் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட இடத்தைத் தவிர்த்துவிடுமாறு அவ்வழியே செல்லும் கப்பல்களுக்கு ஆணையத்தின் துறைமுகச் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு நிலையம் அறிவுறுத்திவருகிறது. இருப்பினும் கடல்நீரில் செல்வதில் பாதுகாப்பு ஏதும் பாதிக்கப்படவில்லை என்றது ஆணையம்.
முன்னதாக ஷெல் நிறுவனம் அதன் புக்கோம் சுத்திகரிப்பு நிலையத்தை விற்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக மே மாதம் ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.

