பாசிர் பாஞ்சாங் முனையம் அருகே கடலில் எண்ணெய்க் கசிவு

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள கடற்கரையின் பெரும்பகுதி மூடல்

3 mins read
473578fd-c999-49bb-8565-4f2802061b3b
செந்தோசாவில் உள்ள தஞ்சோங் கடற்கரையை ஊழியர்கள் சுத்தப்படுத்துகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 5

பாசிர் பாஞ்சாங் முனையத்தில் நிகழ்ந்த கப்பல் விபத்தின் விளைவாக ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு துப்புரவு செய்யப்பட்டு வரும் நிலையில், ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள கடற்கரையின் பெரும் பகுதி பொதுமக்களுக்கு மூடப்படும்.

அங்கு உள்ள பி முதல் எச் வரையிலான கடற்கரைப் பகுதி மூடப்படும்.

லாப்ரடோர் இயற்கைப் பாதுகாப்புப் பகுதி பகுதியில் உள்ள ஜெட்டி, பாறை கரையும் மூடப்படும் என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசிய பூங்காக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம், செந்தோசா மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை சனிக்கிழமை (ஜூன் 15) வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

செந்தோசாவில் தஞ்சோங், பலாவான், சிலோசோ கடற்கரைகள் திறந்திருக்கும், ஆனால் நீர் நடவடிக்கைகளும் நீச்சலும் அனுமதிக்கப்படாது.

உணவு, பான நிறுவனங்கள், நடைபாதைத் தடங்கள், திறந்தவெளிகள், சைக்கிள் பாதைகள் திறந்திருக்கும் என்று அறிக்கை கூறியது.

நெதர்லாந்து கொடி ஏற்றப்பட்டிருந்த ‘ட்ரீட்ஜிங் படகு வோக்ஸ் மாக்ஸிமா’, சிங்கப்பூர் கொடி தாங்கிய ‘பங்கர் கப்பல் மரைன் ஹானர்’ இரண்டும் வெள்ளிக்கிழமை தொடர்புடைய ஒரு சம்பவத்தின் விளைவே இந்த எண்ணெய்க் கசிவு.

கடல் சீற்றம் காரணமாக செந்தோசா, லாப்ரடோர் இயற்கைப் பாதுகாப்புப் பகுதி, தென் தீவுகள், மரினா சவுத் படகுத்துறை, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா உள்ளிட்ட கரையோரங்களில் எண்ணெய் படிந்துள்ளதாக அறிக்கை தெரிவித்தது.

பாசிர் பாஞ்சாங் முனையத்தில் சேதமடைந்த சரக்குக் கப்பலிலிருந்து கசிந்த எண்ணெய், சனிக்கிழமை (ஜூன் 15) ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லேப்ரடார் இயற்கை வனம், கெப்பல் பே, தென் தீவுகள், செந்தோசா ஆகிய கடலோரப் பகுதிகளுக்குப் பரவியது.

கடல் பாதுகாப்பு, பொழுதுபோக்குச் சமூக உறுப்பினர்கள் கடலுயிர் இருப்பிடங்களும் விலங்குகளும் எண்ணெய்யில் நனைந்திருந்ததைக் கண்டனர். அவற்றில் சதுப்புநிலங்களும் ஒரு மீன்கொத்திப் பறவையும் அடங்கும்.

மீன்பிடி, பாய்மரப்படகுச் சமூகத்தினர் அடுத்த சில நாள்களில் மீன்கள் இறப்பது குறித்து விழிப்புடன் உள்ளனர். சிங்கப்பூரின் பவளப்பாறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து கடல் உயிரியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நீச்சல், கடல் சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டதாக சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

பாசிர் பாஞ்சாங் முனையத்தில் சனிக்கிழமை கப்பல் ஒன்று மற்றொரு கப்பலுடன் மோதியதை அடுத்து, எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாக செந்தோசா மேம்பாட்டு நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

முன்னதாக, சொத்து நிர்வாக நிறுவனமான ‘நைட் ஃபிராங்க்’, செந்தோசா கோவ் குடியிருப்பாளர்களிடம் அனுப்பிய கடிதத்தில், அனைத்துக் கடற்கரைகளும் மூடப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணிவாக்கில் பலாவான் கடற்கரையைச் சுற்றி எண்ணெய் இருந்ததாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாக அந்த நிறுவனம் கூறியது.

காலை 7 மணிவாக்கில் மேலும் தீவிரமாக விசாரித்ததைத் தொடர்ந்து, பலாவான், சிலோசோ, தஞ்சோங், செந்தோசா கோவ் ஆகியவற்றில் உள்ள கடற்கரைகளில் எண்ணெய்ப் படலங்கள் தென்பட்டதாக நிறுவனம் கூறியது.

அதனால் அனைத்துக் கடற்கரை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அது சொன்னது. அதோடு, கடல்நீர், சுற்றியுள்ள வனவிலங்குகள் ஆகியவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதே தற்போதைய முன்னுரிமை என்றது அது.

தகுந்த நேரத்தில் ஆக அண்மைத் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் நிறுவனம் சொன்னது.

இதற்கிடையே, கடல் போக்குவரத்திலும், பாசிர் பாஞ்சாங் முனையத்தில் உள்ள செயல்பாடுகளிலும் பாதிப்பு இல்லை என்று கடல் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்