எண்ணெய் வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்த லிம் ஊன் குய்னும் (ஓகே லிம்) அவரின் இரு பிள்ளைகளும் நொடித்துப் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) அரசிதழில் வெளியிடப்பட்டது.
82 வயதான லிம்முக்கும் அவரின் இரு பிள்ளைகளான லிம் ஹுவெய் சிங்கிற்கும் இவான் லிம் சீ மெங்கிற்கும் எதிராக US$3.5 பில்லியன் (S$4.7 பி.) கோரி அளிக்கப்பட்ட தீர்ப்பை செப்டம்பரில் ஏற்றுக்கொண்டனர்.
உரிமை கோருபவர்கள் அனைவருக்கும் பணம் செலுத்துவற்கு தங்களிடம் போதுமான சொத்துகள் இல்லை என்றும், நொடித்துப் போனவர்களாக அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப் போவதாகவும் அவர்கள் அப்போது கூறியிருந்தனர்.
இந்நிலையில், அவர்களை நொடித்துப் போனவர்களாக அறிவிக்கும் உத்தரவு டிசம்பர் 19ஆம் தேதி நடப்புக்கு வந்து வெள்ளிக்கிழமை அரசிதழில் வெளியிடப்பட்டது.
அவர்களின் சொத்துகள், அறங்காவலர்கள் லியோவ் குவெக் ஷியோங், ‘பிடிஓ அட்வைசரி’யின் சியா ரோ லின் இருவரால் நிர்வகிக்கப்படும்.
லிம்மின் குடும்பத்துக்கு எதிராக கலைப்பாளர்கள் தொடுத்த சிவில் வழக்கு 2023 ஆகஸ்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், இந்தத் தீர்ப்புக்கு இணக்கம் தெரிவிக்க முடிவெடுக்கப்பட்டது.
விசாரணையில் லிம்மும் அவரின் இரண்டு பிள்ளைகளும் சாட்சியம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் இணக்கத்துடன் அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, வழக்கின் விசாரணையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது.

