சிங்கப்பூரில் ஏற்கெனவே குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரு ஆடவர்கள் ஆயுதங்களுடன் பிடிபட்டுள்ளனர்.
முஹம்மது ஃபர்ஹான் அம்ரான், 22, போ வெய் கியோங், 34, ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) நள்ளிரவைக் கடந்த நேரத்தில் தெம்பனிஸ் ஸ்திரீட் 45ல் உள்ள புளோக் 492D அருகே ஆயுதங்களுடன் காணப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவ்விருவர் மீதும் புதன்கிழமை (ஜனவரி 14) ஆயுதம் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
அந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய குற்றச்சாட்டையும் சேர்த்து ஃபர்ஹான் 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கடந்த 2024ஆம் ஆண்டு அவர்மீது முதல்முறை குற்றம் சுமத்தப்பட்டது.
2022 ஜனவரி 14ஆம் தேதி $8,000 மதிப்புள்ள மோட்டார்சைக்கிள் ஒன்றை மற்றோர் ஆடவருடன் இணைந்து திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இன்னொருவருடன் இணைந்து வங்கி மோசடியில் அவர் ஈடுபட்டார்.
அந்தக் குற்றங்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது பிணையில் வெளியில் வந்த ஃபர்ஹான் தற்போது ஆயுதத்துடன் பிடிபட்டுள்ளார்.
மற்றொருவரான போ வெய் கியோங், போதைக் கடத்தல் குற்றத்திற்காகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர். தற்போது அவரும் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவ்விருவர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும்.

