தோ பாயோவில் தமது வீட்டுக்கு அருகே பறவைகளுக்குச் சட்டவிரோதமாக உணவளித்ததற்காக 70 வயதுப் பெண்ணுக்குப் புதன்கிழமை (மே 28) $1,200 அபராதம் விதிக்கப்பட்டது.
வனவிலங்குகள் சட்டத்தின்கீழ் சண்முகநாதன் ஷாம்லா இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
தேசியப் பூங்காக் கழகம் புறாக்களைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகள் அவருக்குத் தண்டனை விதிக்கும்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
தேசியப் பூங்காக் கழகத்துக்குத் தகவல் கிடைத்த பிறகு, லோரோங் 4 தோ பாயோவில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஷாம்லா பிடிபட்டார்.
2023 ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 4 மணியளவில், பறவைகளுக்கு ஷாம்லா தானியம் அளிப்பதைக் கண்ட தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள், அது குற்றச்செயல் என்பதால் அவ்வாறு செய்யவேண்டாமெனக் கேட்டுக்கொண்டனர்.
அவ்வாறு எச்சரிக்கப்பட்ட பிறகும், 2024 நவம்பர் வரை பலமுறை ஷாம்லா பறவைகளுக்குத் தொடர்ந்து உணவளித்தார்.
பிப்ரவரி 19ஆம் தேதி, தமது வீட்டிற்கு அருகில் தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் மேற்கொண்ட புறாக்களைப் பிடிக்கும் நடவடிக்கைக்கு ஷாம்லா இடையூறாக விளங்கினார்.
புதன்கிழமை அவர் அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்தினார்.

