சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் வெற்றியாளரான முன்னாள் தேசிய நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், அடுத்த தலைமுறை நீச்சல் விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்க விரும்புகிறார்.
உலகச் சாதனை படைத்துப் பத்தாண்டானதைக் குறிக்கும் வகையில் 31 வயது ஸ்கூலிங் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஓசிபிசி நீச்சல் நிலையத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஜோசஃப் ஸ்கூலிங் விருதை’ அவர் அறிமுகம் செய்துவைத்தார்.
இந்தத் திட்டத்தைத் தொடங்கும் விதமாக, நீச்சல் வீரர்கள் இருவருக்கு ஆளுக்கு $10,000 கல்வி உதவித்தொகை அடுத்த ஈராண்டுகளில் வழங்கப்படும்.
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் பிரிவில் ஸ்கூலிங் தங்கம் வென்றார்.
பின்னர், ‘பெரிய விளையாட்டு விருது’த் திட்டத்தின்கீழ் பெற்ற $1 மில்லியன் ரொக்கப் பரிசிலிருந்து சிங்கப்பூர் நீச்சல் அமைப்பிற்கு 20 விழுக்காட்டைக் கொடுக்கப்போவதாக அவர் சொல்லியிருந்தார். அதைப் பிரதிபலிக்கும் வகையில், தொடக்கமாக $200,000 நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
டிபிஎஸ் வங்கி, ஹியூகோ பாஸ், டொயோட்டா, யாக்குல்ட் போன்ற நிறுவனங்களின் ஆதரவு மூலம் மில்லியன் கணக்கில் பணம் ஈட்டினார் ஸ்கூலிங்.
தொடர்ச்சியான நிதித் திரட்டல் மூலம், இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, நீச்சல் விளையாட்டு வீரர்கள் பலருக்கும் அவர்களின் இலக்குகளை அடைவதற்கு உதவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட100 பேர் கலந்துகொண்டனர். அதில் பேசிய ஸ்கூலிங், இந்த முயற்சிக்கு ஆதரவளித்ததற்காகச் சிங்கப்பூர் நீச்சல் அமைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.
தமது பயணம் ஒரு கனவாகத் தொடங்கி, பலரின் உதவியோடும் மகிழ்ச்சியும் மனவேதனையும் நிறைந்த தருணங்களோடும் நனவானதாகக் கூறினார் சிங்கப்பூரின் ஒலிம்பிக் நட்சத்திரம்.
“எனது அம்மாவும் அப்பாவும் அளித்த தளராத ஆதரவால்தான் என்னால் தங்கப் பதக்கம் வெல்ல முடிந்தது. இப்போது அதே கனவைப் பகிர்ந்துகொண்டு கற்பனைக்கு அப்பாற்பட்டு அதைத் தொடரத் துணிபவர்களை அங்கீகரித்து ஊக்கப்படுத்த என் பங்களிப்பைச் செய்ய விரும்புகிறேன்,” என்றார் ஸ்கூலிங்.



