சிங்கப்பூரையும் மலேசியாவின் ஜோகூர் பாருவையும் இணைக்கும் விரைவு ரயில் திட்டம் (ஆர்டிஎஸ்) சேவையைத் தொடங்கும்போது, சிங்கப்பூரர்கள் ஜோகூரில் தங்களின் செலவுகளை மேலும் அதிகரிப்பர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆண்டுக்கு S$1.05 பில்லியன் கூடுதலாக அவர்கள் செலவிடுவர் என்று வியாழக்கிழமை (ஜூலை 16) வெளியான ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதேவேளையில், சிங்கப்பூருக்கு வரும் ஜோகூர் பாரு குடியிருப்பாளர்கள் ஆண்டுக்கு S$756 மில்லியன் கூடுதலாகச் செலவிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்களின் வெளிநாட்டுப் பயணம் 51 விழுக்காடு அதிகரிக்கும் என்று ஆய்வு முன்னுரைக்கிறது. அதாவது சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாரு சென்று திரும்பும் பயணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 11.2 மில்லியன் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அங்கிருந்து சிங்கப்பூர் வந்து திரும்பும் பயணங்கள் ஆண்டுக்கு 3.3 மில்லியன் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், சிங்கப்பூர் உணவகங்கள் சங்கம், சிங்கப்பூர் சில்லறை வணிகர் சங்கம் ஆகியவை இணைந்து அண்மைய ஆய்வை நடத்தின.
2027 ஜனவரியில் ஆர்டிஎஸ் சேவை தொடங்கியபின் சிங்கப்பூரின் சில்லறை விற்பனை, உணவு-பானத் துறைகளில் வாடிக்கையாளர் செலவிடும் போக்கு, சுற்றுப்பயணப் போக்குவரத்து, வர்த்தகப் போட்டித்தன்மை ஆகியவை எவ்வகையில் மாறக்கூடும் என்று மதிப்பிடுவது அதன் நோக்கம்.
கடந்த மார்ச் மாதம், சிங்கப்பூர்ப் பயனீட்டாளர்கள் ஏறத்தாழ 1,700 பேரும் ஜோகூர் பாருவைச் சேர்ந்த 400 பேரும் ஆய்வில் கருத்துரைத்தனர். கடன் அட்டைச் செலவு, அரசாங்கப் புள்ளிவிவரங்கள் போன்றவையும் கருத்தில் கொள்ளப்பட்டன.
சிங்கப்பூரர்கள் அங்குச் செலவிடுவதில் மளிகைச் சாமான்கள் ஆக அதிகப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நிலைகளில் மருந்துப் பொருள்கள், உணவு, அழகுப் பராமரிப்புச் சேவைகள் போன்றவை இருக்கக்கூடும்.
ஆய்வில் கருத்துரைத்த வர்த்தக நிறுவனங்கள், ஆர்டிஎஸ் சேவை தொடங்கியபின் ஜோகூர் பாரு நிறுவனங்களுடனான போட்டி கடுமையாகும் என்று கூறின.
சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு போன்றவை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சிங்கப்பூர் வர விரும்பும் ஜோகூர் பாருவாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரியவந்ததாக ஆய்வு குறிப்பிட்டது.

