ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு 250% வெப்பத் தாக்கப் பாதிப்பு: ஆய்வு

ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு 250% வெப்பத் தாக்கப் பாதிப்பு: ஆய்வு

2 mins read
cf0e71dd-3a94-4e3a-bc1c-e40b5b70ca03
வெப்பம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூரின் மத்திய, கிழக்கு பகுதிகளில் பணியாற்றியவர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சராசரி வெப்பநிலையில் ஏற்படும் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் உயர்வும் வெளிப்புறங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வெப்பத்தாக்கம் ஏற்படும் அபாயத்தை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து அதிகபட்ச வெப்பநிலை நீடித்தால், ஊழியருக்கு வெப்பத்தினால் காயம் ஏற்படும் வாய்ப்பு நான்கு மடங்கு உயரக்கூடும் என அந்த ஆய்வை நடத்திய சிங்கப்பூர் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2009ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிப்புறங்களில் வேலை பார்த்த கிட்டத்தட்ட 40 ஊழியர்கள் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் இணை உதவிப் பேராசிரியர் ஜோயல் ஐக் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

மேலும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிங்கப்பூரின் மத்திய, கிழக்கு பகுதிகளில் பணியாற்றியவர்கள் என்றும் அப்பகுதிகளில் சராசரி வெப்பநிலை மற்ற இடங்களைவிட அக்காலகட்டத்தில் சற்று அதிகமாக (கிட்டத்தட்ட 28°C) இருந்தது என்றும் அவை குறிப்பிட்டன.

வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்ட வெளிப்புற ஊழியர்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகப் பட்டியலிட்ட முதல் உள்ளூர் ஆய்வு இதுவாகும்.

தசைப்பிடிப்பு போன்ற மிதமான பாதிப்புகளுக்கு ஊழியர்கள் மருத்துவ உதவியை நாடாததால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வ எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனப் பேராசிரியர் ஐக் தெரிவித்தார்.

சிங்கப்பூர் இவ்வாண்டின் வெப்பமான காலத்திற்குள் (மார்ச் முதல் ஜூன் வரை) நுழைந்துள்ள வேளையில், ‘அர்பன் கிளைமேட்’ (Urban Climate) என்ற அறிவியல் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியானது.

மனிதவள அமைச்சிடம் தெரிவிக்கப்பட்ட சுமார் 40 சம்பவங்களில், 85 விழுக்காடு வெப்பத்தாக்கம், வெப்ப அயற்சி போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவை.

அதிக உடல் வெப்பநிலை, மனக்குழப்பம், வலிப்பு ஆகியவை வெப்பத்தாக்கத்தின் அறிகுறிகளில் அடங்கும்.

அப்பிரச்சினைகளுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காவிட்டால், அது மூளை, இதயம், சிறுநீரகம், தசைகள் ஆகியவற்றை விரைவில் பாதிக்கும்.

குறிப்புச் சொற்கள்