அரசு கட்டணங்களைக் குறைத்து, வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படும் மானியங்களை அதிகரிப்பதன் மூலம், 2028ஆம் ஆண்டிற்குள் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளுக்குக் குடும்பங்கள் செலுத்தும் கட்டணம் குறையும்.
மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் பகல்நேரச் செயல்பாட்டு நிலையங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட வேலையிடங்களிலும் கூடுதல் இடவசதிகள் ஏற்படுத்தப்படும்.
சமூக மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளைப் பெறும் சுமார் 5,000 பேர், 2030ஆம் ஆண்டிற்குள் இம்மாற்றங்களால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு நிதியுதவி பெறும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளுக்கும் கட்டண உச்சவரம்புகள் அறிமுகப்படுத்தப்படும். வெவ்வேறு சேவைகளுக்கு இந்தக் கட்டண அளவுகள் மாறுபடும்.
பெரும்பாலான குடும்பங்களுக்கு, மானிய விகிதங்கள் குறைந்தது 10 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை அதிகரிக்கப்படும். வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த மானியங்கள், பகல்நேரச் செயல்பாட்டு நிலையங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொருந்தும்.
இந்த மானியங்களைப் பெறுவதற்கான குடும்ப வருமான வரம்பும் உயர்த்தப்படும். ஒரு குடும்பத்தில் தனிநபர் ஒருவருக்கான அதிகபட்ச மாத வருமான வரம்பு $4,800லிருந்து $6,000ஆக அதிகரிக்கப்படும்.
இதன் மூலம் மேலும் பல நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு நிதி உதவி கிடைக்கும். அத்துடன், மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களில் சுமார் 80 விழுக்காட்டினர் இதன் பலனைப் பெறுவார்கள் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை மேலும் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கச் செய்வதற்கான இந்த நடவடிக்கைகள், வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 17) வெளியிடப்பட்ட, மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்கான பாதுகாப்பு குறித்த பணிக்குழுவின் முதல் தொகுதி பரிந்துரைகளில் அடங்கும்.
மாற்றுத் திறனாளி சமூகத்திற்கான ஆதரவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் எவ்வாறு வலுப்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக, இந்தப் பணிக்குழு டிசம்பர் 2025ல் அமைக்கப்பட்டது. மேலும், இது குடும்பங்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட குழுக்களுடன் பல கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தியுள்ளது.
மேலும் நான்கு அரசியல் பதவிகளை வகிப்பவர்களுடன் இந்தப் பணிக்குழுவை வழிநடத்தும், சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங், லெங்கோக் பாருவில் உள்ள ‘எனேபலிங் வில்லேஜ்’ வளாகத்தில் அமைந்துள்ள ‘டச் சென்டர் ஃபார் இன்டிபென்டன்ட் லிவிங்’ நிலையத்துக்குச் சென்றிருந்தபோது இந்தத் திட்டங்களை அறிவித்தார்.
பராமரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று செலவைச் சமாளிக்கும் திறன் என்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் பராமரிப்புச் செலவுகளை ஈடுகொடுப்பது குறித்து சிலர் நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் திரு கோ கூறினார்.
“காலப்போக்கில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். தங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு தொடர்ந்து கட்டுப்படியான விலையிலேயே இருக்கும் என்பதற்கான உறுதியை குடும்பங்கள் எதிர்பார்க்கின்றன,” என்றும் திரு கோ குறிப்பிட்டார்.
2024ல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 1,000 கூடுதல் இடங்களுக்கு மேலதிகமாக, 2030ஆம் ஆண்டிற்குள் மேலும் பகல்நேரச் செயல்பாட்டு நிலையங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட வேலையிடங்களிலும் 1,300 கூடுதல் இடவசதிகளை அமைச்சு சேர்க்கவுள்ளது என்றும் அமைச்சர் கோ தெரிவித்தார்.
