சிங்கப்பூரின் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த புதிய பட்டதாரிகளில் ஐந்தில் ஒரு பங்கினர், 2026 ஜூன் நிலவரப்படி இன்னமும் வேலை தேடி வருகின்றனர் என்று மனிதவளத் தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் தெரிவித்துள்ளார்.
18,000 பேரைக் கொண்ட ஆக அண்மைய பட்டதாரித் தொகுதியில் 3,600 பேர் வேலை தேடுகின்றனர். அதேவேளையில், 9,100 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. 5,400 பேர் மேற்கல்வி பயில்வது, வேலையில் சேர்வதற்கு முன்னர் ஓய்வெடுப்பது போன்ற சொந்தக் காரணங்களால் ஊழியரணியில் தற்போது இணையவில்லை. புதிய பட்டதாரிகளுக்கான தொடக்கநிலை வேலைவாய்ப்புகள் குறித்து புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா கேட்ட கேள்விக்குத் திருவாட்டி லாவ் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) சார்ந்த தொடக்கநிலை வேலைகளின் எண்ணிக்கை 2025 டிசம்பரில் இருந்த 32,500லிருந்து 2026 மார்ச்சில் 32,800 ஆகச் சிறிதளவு உயர்ந்தது. புதிய பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பொதுவாக மீள்திறன்மிக்கதாக உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர் லாவ், 2025ஆம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் 10ல் ஒன்பது பேருக்குப் பட்டம் பெற்ற 12 மாதங்களுக்குள் வேலை கிடைத்ததாகத் தெரிவித்தார். வேலைசார் கற்றல் திட்டங்களை விரிவுபடுத்த உயர்கல்வி நிலையங்கள், தொழில்துறைப் பங்காளிகளுடன் மனிதவள அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு விரைவாக உள்ள துறைகளில் பட்டதாரிகள் அனுபவம் பெற இத்திட்டங்கள் உதவும்.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் நடத்தும் சிறப்புப் பயிற்சித் திட்டங்கள், நிதித் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் மாணவர்களுக்குப் பயன்படும் திறன்களை வழங்குகின்றன.
இதற்கிடையே, நிதி நிறுவனங்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நடைமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு, நிதித்துறைத் திறன்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் ‘நிதியில் செயற்கை நுண்ணறிவுக்கான இளம் திறனாளர்’ திட்டத்தை நாணய ஆணையம் அண்மையில் தொடங்கியது.


