பதின்மவயதினராக இருந்தபோது சகோதரியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய நான்கு சகோதரர்களில் ஒருவர், குறைந்தது 12 மாதங்கள் சீர்திருத்தப் பயிற்சிக்குச் செல்லவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றத்தைப் புரிந்தபோது அவருக்கு வயது 16 அல்லது 17. பாலியல் தொடர்பான ஒரு குற்றச்சாட்டுக்கு அவர் பிப்ரவரி மாதம் ஒப்புக்கொண்டார்.
மற்ற ஏழு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
தற்போது இருபது வயது பூர்த்தியான அந்தக் குற்றவாளி, தண்டிக்கப்படும் மூன்றாவது சகோதரர்.
எட்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஆக மூத்த சகோதரருக்கு மே 20ஆம் தேதி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
அதற்கு மறுநாள் இரண்டாவது சகோதரருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
மார்ச் 12ஆம் தேதி கற்பழிப்புக்காக இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஆக இளைய சகோதரருக்கு எதிரான வழக்கு தொடர்கிறது.

