கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு சனிக்கிழமையன்று ஸ்கூட் விமானச் சேவை எண் டிஆர் 469ல் (TR469) பயணம் மேற்கொண்டவர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் குறிப்பிட்டுக்கூறும் அளவுக்கு காலதாமதம், இடையூறுகளை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பயணிகள் இருமுறை விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டு பின்னர் கிட்டத்தட்ட ஒருநாள் தாமதத்துக்குப் பின் பயணம் மேற்கொண்டதாக 8வேர்ல்ட் நியூஸ் ஊடகத் தகவல் கூறுகிறது.
அந்த விமானப் பயணம் முதன் முதலில் இரவு 7.10க்கு தொடங்க இருந்ததாக குறிப்பிடும் ஜேசன் டான் என்ற பயணி, ஒருமணி நேரத்துக்கு மேல் விமானம் கிளம்பவில்லை என்று கூறுகிறார்.
“குளிரூட்டியும் திறந்துவிடப்படாத நிலையில் மூச்சுவிடவே கடினமாக இருந்தது,” என மாண்டரின் மொழி ஊடகம் அவரைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.
பின்னர் தொழில்நுட்பக் கோளாறு என்ற செய்தி வந்ததும் முதல் முறையாக பயணிகள் தரையிறக்கப்பட்டதாக திரு டான் தெரிவித்தார்.
பிறகு ஒருமணி நேரம் கழித்து மீண்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு இம்முறை விமானம் இரவு 11.30 மணிக்கு கிளம்பும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நடு இரவிலும் விமானம் தரையிறக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது என்றும் மீண்டும் பயணிகள் அனைவரும் இறங்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாற்றியமைக்கப்பட்ட விமானப் பயணத்துக்காக காத்திருந்த ஸ்டிவன் காங் என்பவர், “ஒருமணி நேரம் எடுக்க வேண்டிய விமானப் பயணம் பின்னர் 23 மணிநேரம் ஆனது,” என்று கூறினார்.