சிங்கப்பூரில் திறனாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள ஏறத்தாழ 3,000 ஊழியர்களுக்கு ‘ஒன் பாஸ்’ எனப்படும் வெளிநாட்டுக் கட்டமைப்புகள், நிபுணத்துவ அட்டைகள் (Overseas Networks and Expertise (One) Pass) வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒன் பாஸ் அட்டைகளைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை, வெவ்வேறு துறைகளில் எத்தனை பேருக்கு அந்த அட்டை வழங்கப்பட்டது என்ற கேள்விகளை நியமன நாடாளுமன்ற உறுப்பினர் நீல் பரேக் எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கும் வண்ணம் அமைச்சர் டானின் உரை அமைந்தது.
“ஒன் பாஸ் அட்டையைப் பெறும் தகுதியைக் கொண்டவர்களின் வேலை அனுமதி அட்டை வெளிநாட்டுக் கட்டமைப்புகள், நிபுணத்துவ அட்டைகளுக்கு மாற்றப்படுகிறது. இதன்மூலம் திறனாளர்களைச் சிங்கப்பூரில் தக்கவைத்துக்கொள்ளலாம்,” என்றார் அமைச்சர் டான்.
ஒன் பாஸ் அட்டை கொண்ட ஊழியர்கள் பலர் நிதி, காப்புறுதிச் சேவை, தகவல், தொடர்புச் சேவை, நிபுணத்துவச் சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒன் பாஸ் அட்டை வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டவரிடமிருந்து சிங்கப்பூரர்கள் எவ்வாறு திறன்களைக் கற்றுக்கொள்கின்றனர் என்பதை மனிதவள அமைச்சு எவ்வாறு மதிப்பீடு செய்கிறது என்று பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் கேள்வி எழுப்பினார்.
ஒவ்வோர் ஒன் பாஸ் வழங்கப்பட்டதற்கும் உள்ளூர் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பணியமர்த்தப்படுவது குறித்தும் அவர் வினவினார்.
இத்திட்டம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து ஒன் பாஸ் வழங்கப்படுவதால் பொருளியலில் ஏற்படும் தாக்கம் குறித்து சுயேச்சை மதிப்பீடுகள் அல்லது தணிக்கைகள் நடத்தப்பட்டுள்ளனவா என்று அவர் கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஒன் பாஸ் திட்டத்தின் செயல்பாடு குறித்த மதிப்பீடு தொடர்பான விவரங்கள் மனிதவள அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பான விவாதத்தின்போது வெளியிடப்படும் என்றார் அமைச்சர் டான்.
ஒன் பாஸ் திட்டம் நடப்புக்கு வந்ததிலிருந்து அந்த அட்டையைப் பெற்றவர்களுக்கு வருடாந்திர அறிவிப்புத் திட்டத்தை மனிதவள அமைச்சு 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கியதாக அவர் கூறினார்.
இதன்மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை மனிதவள அமைச்சு மறுஆய்வு செய்து, ஒன் பாஸ் அட்டை வைத்திருப்போரின் பங்களிப்புகளை மதிப்பீடு செய்யும் என்றார் அமைச்சர் டான்.

