தொழில்நுட்பத் திறனாளர்களைக் குறிவைக்கும் புதிய ‘ஒன் பாஸ்’ அனுமதி அட்டை

தொழில்நுட்பத் திறனாளர்களைக் குறிவைக்கும் புதிய ‘ஒன் பாஸ்’ அனுமதி அட்டை

2 mins read
e239c2ef-843e-4b5c-9608-c57fc18335b4
தற்போது 8,000க்கும் மேற்பட்டோர் ‘ஒன் பாஸ்’ அட்டையின்கீழ் சிங்கப்பூரில் பணியாற்றுகின்றனர். - கோப்புப் படம்

செயற்கை நுண்ணறிவு, துளிமக் கணிமை (quantum computing) உள்ளிட்ட முக்கியமான, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் வல்லமை பெற்றவர்களை ஈர்க்கும் சிங்கப்பூரின் திறனை வலுப்படுத்த, புதிய ‘ஒன் பாஸ் (ஏஐ, தொழில்நுட்பம்)’ அறிமுகம் செய்யப்படும்.

வெளிநாட்டுத் தொழில்நுட்பத் திறனாளர்களுக்கான தற்போதுள்ள ‘டெக்.பாஸ்’ (Tech.Pass) அனுமதிக்குப் பதிலாக, இந்த முறை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மனிதவள அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இதனை அறிவித்த டாக்டர் டான், திறனாளர்களைத் தொடர்ந்து ஈர்க்க சிங்கப்பூர் அனைத்துலக அளவில் தொடர்ந்து போட்டியிடும் என்றார்.

உயர்திறன்களைக் கொண்டோருக்காக 2023ஆம் ஆண்டில் வெளிநாட்டுத் தொடர்பமைப்புகள், நிபுணத்துவ அட்டை (ONE Pass) அறிமுகமானதிலிருந்து அதனைப் பெறுபவர்களின் எண்ணிக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

“தற்போது 8,000க்கும் மேற்பட்டோர் ‘ஒன் பாஸ்’ அட்டையின்கீழ் இங்கு வந்துள்ளனர். அவர்களில் பலர், நம் வருங்காலப் பொருளியலுக்கு மிக முக்கியமான துறைகளில் பங்காற்றுகின்றனர்,” என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.

வரவுசெலவுத் திட்ட உரையின்போது அறிவிக்கப்பட்ட எம்ப்ளாய்மென்ட் பாஸ், எஸ்-பாஸ் ஆகியவற்றின் தகுதிநிலைச் சம்பளங்களின் ஏற்றம் தொடர்பான விவரங்களையும் அவர் வெளியிட்டார்.

2027 முதல் எம்ப்ளாய்மென்ட் பாஸ் வேலை அனுமதி அட்டைக்கான குறைந்தபட்சத் தகுதிநிலைச் சம்பளம் 5,600 வெள்ளியிலிருந்து 6,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.

நிதித்துறையில் இல்லாத ‘எஸ்-பாஸ்’ வேலை அனுமதி அட்டை விண்ணப்பங்களுக்கான குறைந்தபட்சத் தகுதிநிலைச் சம்பளமும் உயர்த்தப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னதாகக் கூறியிருந்தார்.

அதன்படி, 2027 ஜனவரி முதல் புதிய எஸ்-பாஸ் விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்சத் தகுதிநிலைச் சம்பளம் 3,300 வெள்ளியிலிருந்து 3,600 வெள்ளிக்கு உயர்த்தப்படும். எஸ்-பாஸ் புதுப்பிப்போருக்கும் 2028 ஜனவரி முதல் இந்தப் புதிய விதிமுறை அமலுக்கு வரும்.

“இந்தத் தகுதிநிலைச் சம்பளங்கள், உள்ளூர்ச் சம்பளத் தரநிலைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும். குறைந்த சம்பளத்தை ஏற்று, இங்கு வந்து வேலைக்காக வெளிநாட்டினர் போட்டியிடுவதைத் தடுக்க இந்நடவடிக்கை வகைசெய்கிறது,” என்று டாக்டர் டான் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்