வாகனம் ஓட்டும்போது கைப்பேசிகளைப் பயன்படுத்துவது, ஓட்டுநர்களின் கவனத்தைச் சாலையிலிருந்து திசைதிருப்புவதால், உடனடியாகச் செயல்படும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்து, விபத்து ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கிறது.
2025ஆம் ஆண்டில் கைப்பேசியுடன் வாகனம் ஓட்டுதல் தொடர்பான விதிமீறல்கள் 4,193 ஆக அதிகரித்துள்ளதாகவும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வாகனம் ஓட்டும்போது பல கைப்பேசியின் பல திரைகளில் ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வதால் ஏற்படும் அபாயங்களைச் சுட்டிக்காட்டி, குரல் வழி வழிசெலுத்தலைப் பயன்படுத்தவும் கைப்பேசிகளைப் பயன்படுத்தப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தவும் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வாகனங்களில் சாதனங்களைப் பொருத்துவதைத் தடை செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், அது ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போது தங்கள் சாதனங்களைக் கையில் வைத்திருக்க வழிவகுக்கும் என்று தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் கூறியுள்ளார்.
“சாலைகளில் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருப்பதும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதும் ஓட்டுநரின் பொறுப்பாகும். முக்கியப் பிரச்சினை, சாதனங்களை நிறுவுவதோ அல்லது பொருத்துவதோ அல்ல. மாறாக, வாகனம் ஓட்டும்போது அத்தகைய சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்துவதுதான்,” என்று ஹவ்காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் எழுப்பிய கேள்விக்கு மார்ச் மாதம் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் கூறினார்.
தேசிய நரம்பியல் கழகத்தைச் சேர்ந்த இணை மருத்துவ ஆலோசகர் ஆண்ட்ரூ லீ, ஒரு வாகனத்தில் இயக்கப்படும் ஒவ்வொரு திரையும் கவனத்தைக் கோருகிறது என்று கூறினார்.
“இந்தத் திரைகள் பயனுள்ள ஓட்டுநர் தகவல்களைக் காட்டக்கூடும். இது ஓட்டுநர் பழக்கங்களை மேம்படுத்த உதவக்கூடும். இருப்பினும், வாகனம் ஓட்டும்போது இவற்றைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் கூறினார்.
“இந்தத் திரைகளைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும், முன்னால் உள்ள சாலையில் முழு கவனம் செலுத்தாத ஒரு நொடியாகும். இது பின்னர் சாலை விபத்துகளுக்கு வழிவகுக்கும்,” என்றார் அவர்.
இதற்குத் தீர்வாக, ஓட்டுநர்கள் தங்கள் பார்வையைச் சாலையிலேயே வைத்திருக்க உதவும் குரல்வழி வழிசெலுத்தலைப் பயன்படுத்துமாறு அவர் பரிந்துரைத்தார்.
“கவனம் தேவைப்படும் மற்ற எல்லாப் பணிகளுக்கும், உங்கள் காரைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு, பிறகு உங்கள் கைப்பேசியைப் பயன்படுத்துங்கள்,” என்றும் திரு லீ ஆலோசனை கூறினார்.

