அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள புதிய 12.5 விழுக்காடு இறக்குமதி வரி விதிப்பு முறை அமலுக்கு வரும்போது, சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்படும் என்று வர்த்தக, தொழில்அமைச்சு தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள் மீதான அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கையின்கீழ் இந்த வரி விதிப்பு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும், எரிசக்திப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், அதன் மூலப்பொருள்கள், சில குறிப்பிட்ட மின்னணு மற்றும் விண்வெளித் துறைப் பொருள்கள், பகுதிமின்கடத்தி, நாணயத் தயாரிப்புக்கான உலோகங்கள் ஆகியவற்றுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து தயாரிக்கப்படும் பொருள்களின் இறக்குமதியைத் தடுப்பதில் தவறிவிட்டதாகக் கூறி, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 2) இந்தப் புதிய வரி விதிப்பு முறையைப் பரிந்துரைத்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வர்த்தக, தொழில் அமைச்சு சிங்கப்பூரின் விநியோகச் சங்கிலிகளில் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்து தயாரிக்கப்படும் பொருள்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அதற்கு எதிராகச் சிங்கப்பூர் கடுமையான சட்டக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
உற்பத்தித் துறையில் நிலவும் உற்பத்தித் தேக்கம் தொடர்பான அமெரிக்காவின் மற்றொரு விசாரணைப் பட்டியலிலும் சிங்கப்பூர் உட்பட 16 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக, அதிபர் டோனல்ட் டிரம்ப் 2025ஆம் ஆண்டில் விதித்திருந்த வர்த்தக வரிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தற்காலிகமாக விதிக்கப்பட்ட 10 விழுக்காடு வரியை மாற்றியமைக்கும் நோக்கில் இந்தப் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புதிய வரி விதிப்புத் திட்டங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு மற்றும் விசாரணைகள் வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ளன.

