வாஷிங்டன்: சிங்கப்பூரிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு 12.5 விழுக்காட்டுப் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகளை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொத்தடிமை முறை மூலம் தயாரிக்கப்படும் பொருள்களைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறி, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மார்ச்சில் தொடங்கி ஜூலை வரை நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, சிங்கப்பூர் உட்பட 45 நாடுகள் இந்த வரி உயர்வை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபடுவதாகவோ தொழிலாளிகளை வலுக்கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகவோ கூறப்படுவதைச் சிங்கப்பூர் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இத்தகைய ஒழுங்கற்ற நடவடிக்கைகளைத் தான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்றும் அமெரிக்காவிடம் அது தெரிவித்துள்ளது.
மணிலாவில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின்போது, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவிடம் இதுகுறித்துப் பேசினார்.
அதேவேளையில், எரிசக்திப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், விண்வெளித் தயாரிப்புகள், பகுதிமின்கடத்திகள் போன்ற சில முக்கிய ஏற்றுமதிகளுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு ஜூன் மாதம் தெரிவித்திருந்தது.
அமெரிக்காவின் இந்தப் புதிய நடவடிக்கையால் மெக்சிகோ, பிரிட்டன், கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு 10 விழுக்காட்டு வரி விதிக்கப்படும். ஜப்பான், தென்கொரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் ஏற்றுமதிகளுக்கும் 12.5 விழுக்காட்டு வரி பொருந்தும்.
மேலும், உற்பத்தித் துறைகளில் உள்ள நடைமுறைகள் குறித்துச் சிங்கப்பூர் உள்ளிட்ட 16 நாடுகளிடம் அமெரிக்கா தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக விதிக்கப்பட்டிருந்த 10 விழுக்காட்டு உலகளாவிய வரியின் காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, இப்புதிய வரி அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்படலாம் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

