சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் உள்ள குடும்பங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒன்று சிங்கப்பூரில் கார் வைத்துள்ளது. 2013ஆம் ஆண்டில் இருந்த 40 விழுக்காடு விகிதத்தைவிட இது குறைவு.
சிங்கப்பூரில் தனியார் கார்களின் பயன்பாட்டைக் குறைக்க அரசாங்கம் முயன்று வருகிறது.
ரயில் கட்டமைப்பின் விரிவாக்கம் வழி, 2030ஆம் ஆண்டுக்குள் தற்போதைய 64 விழுக்காட்டைக் காட்டிலும், 75 விழுக்காட்டு உச்ச நேரப் பயணங்கள் பொதுப் போக்குவரத்தில் இடம்பெற அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
தற்காலிக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் இந்தப் புள்ளிவிவரங்களை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சாலைகளில் தற்போது 650,000 கார்கள் உட்பட ஒரு மில்லியன் வாகனங்கள் இருப்பதால், சிங்கப்பூரில் வாகன எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பது நிலைக்கக்கூடியதன்று என அவர் கூறினார்.
நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூரில், போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க வாகன எண்ணிக்கை அதிகரிப்பு முற்றிலும் இல்லாத கொள்கைக்கான தேவையை திரு சீ மறுஉறுதிப்படுத்தினார்.
வாகனங்கள் அதிகரித்தால், சாலைக் கட்டுமானத்திற்குக் கூடுதல் நிலம் ஒதுக்கப்படவேண்டும் அல்லது மற்ற நாடுகளில் உள்ள நகரங்களைப்போல அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க சாலைகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவை ஏற்படும்.
சிங்கப்பூரின் மொத்த நிலப் பரப்பளவில் கிட்டத்தட்ட 12 விழுக்காடு சாலைகளாக உள்ளன. சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டுக் கரிம வெளியேற்றத்தில் ஏறத்தாழ 15 விழுக்காடு நிலப் போக்குவரத்துக் கட்டமைப்பிலிருந்து வருவதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
குறைவான கரிமத்தை வெளியேற்றும் போக்குவரத்து வசதிகளின் பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் மற்ற நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
ஆகக் குறைவான நிலப் பயன்பாட்டுடனும் கரிம வெளியேற்றத்துடனும் அதிகமானோரைத் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்குக் கொண்டுசெல்ல பொதுப் போக்குவரத்தால் முடியும் என்றார் திரு சீ.

