தானியங்கி வாகனங்களின் தாக்கம் குறித்து மூன்றில் ஒரு பேருந்து ஓட்டுநர் கவலை

தானியங்கி வாகனங்களின் தாக்கம் குறித்து மூன்றில் ஒரு பேருந்து ஓட்டுநர் கவலை

2 mins read
007de306-4c64-4f43-a7f5-86591753d14d
இவ்வாண்டின் நடுப்பகுதியில் ஆறு தானியங்கி வாகனங்களை அறிமுகம் செய்ய அரசாங்கம் முயன்று வருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தானியங்கி வாகனங்களால் தங்களது வேலையில் ஏற்படும் தாக்கம் குறித்து பொதுப் போக்குவரத்து ஊழியர்களில் மூவரில் ஒருவர் கவலை தெரிவித்திருப்பதாக தேசிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் நடத்திய ஆய்வில் அவர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.

“ஓர் ஓட்டுநரின் உள்ளுணர்வை தானியங்கி வாகனங்கள் எளிதில் மாற்றிவிட முடியாது,” என்றனர் அவர்கள்.

மேலும், தானியங்கி வாகனங்களின் வருகையால் சம்பளம் குறையும் என்பதும் வேலை நீடிக்கும் என்ற உத்தரவாதம் இருக்காது என்பதும் அவர்களின் முக்கிய கவலைகளாக உள்ளன.

ஆய்வில், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பர்கள் என 500 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தானியங்கி வாகனங்களுக்கான மாற்றம் குறித்து பொதுப் போக்குவரத்து ஊழியர்களை நேரில் சந்தித்து விளக்கும் பணியைத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தொடங்கி உள்ளது.

அதற்காக ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுடன் அக்குழு கலந்துபேசும் நிகழ்வு ஓராண்டு காலத்திற்கு நீடிக்கும் என்றும் நிபுணத்துவ பேருந்து ஓட்டுநர்கள் அதில் பங்கேற்பார்கள் என்றும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) வெளியிட்ட அறிக்கையில் என்டியுசி தெரிவித்ததாக ‘மதர்ஷிப்’ இணையச் செய்தி கூறியது.

கோ-அஹெட் சிங்கப்பூர், எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி கார்ப்பரேஷன், டவர் டிரான்சிட் ஆகிய போக்குவரத்து நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து குழு விவாதம் நடத்தப்படுகிறது.

இவ்வாண்டின் நடுப்பகுதியில் ஆறு தானியங்கி வாகனங்களை அறிமுகம் செய்ய அரசாங்கம் முயன்று வரும் வேளையில் ஓட்டுநர்களின் கருத்து வெளியாகி உள்ளது.

மரினா பே மற்றும் ஒன் நார்த் பகுதிகளுக்கான சேவையில் மூன்றாண்டு கால முன்னோடித் திட்டத்தில் அந்த வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி வரும் பேருந்து சேவைகளும் அந்தப் பகுதிகளில் தொடரும்.

குறிப்புச் சொற்கள்