சிங்கப்பூரில் மூன்று மூத்தோரில் ஒருவர் தங்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு கண் நோய் இருப்பது பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.
அதேபோல, ஐவரில் ஒருவர் கணிசமான செவிப்புலன் குறைபாடு உள்ளவர்கள். ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் காதுகேட்புக் கருவியைப் பயன்படுத்துவதில்லை.
மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி நிறுவனம் (SERI) அந்த ஆய்வை நடத்தியது.
பார்த்தல், கேட்டல், வாசனை அறிதல் ஆகியன தொடர்பான குறைபாடுகள் மூத்தோரிடையே பரவலாக உள்ளதை ஆய்வு கண்டறிந்தது.
அந்த முப்புலன் இழப்பு என்று அழைக்கப்படுகிறது.
மூத்தோரில் ஐவரில் ஒருவர், ஒரு வகையான முப்புலன் இழப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், அன்றாடச் செயல்பாடுகளில் சிரமத்தை எதிர்நோக்கும் அவர்களின் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் மற்றவர்களைக் காட்டிலும் நான்கு முதல் ஆறு மடங்கு வரை அதிகமாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
‘மக்கள்தொகை சுகாதாரம் மற்றும் வயது தொடர்பான புலன் சரிவு உள்ளோர்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், சீன, மலாய், இந்திய இனங்களைச் சேர்ந்த 2,636 முதியோர் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர்.
அவர்கள் அனைவரும் 60 வயதுக்கும் 102 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
கடந்த 2017 டிசம்பர் முதல் 2022 அக்டோபர் வரை நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறிந்தவை தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 17 ஆய்வுக் கட்டுரைகளை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆக அண்மைய கட்டுரை செவிப்புலன் குறைபாட்டின் பரவல் மற்றும் அபாயக் காரணிகள் தொடர்பானது. அந்தக் கட்டுரை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
ஆய்வை நடத்திய சிங்கப்பூர் கண் ஆராய்ச்சி நிறுவனம் (SERI) சிங்கப்பூர் தேசிய கண் சிகிச்சை நிலையத்தின் ஆராய்ச்சிப் பிரிவு ஆகும்.
“நமக்கு வயதாகும்போது, நமது உடல், இருதயம், சுவாசக் குழாய், தசை, மூளை, புலன்கள் ஆகிய அனைத்துக்கும் ஒரே நேரத்தில் வயதாகின்றன,” என்று கூறினார் ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் லாமோரியக்ஸ்.
“ஒன்றோடு ஒன்று தொடர்புடைய குறைபாடுகளைக் கண்டறிய முழுமையான, விரிவான அணுகுமுறை அவசியம். சிங்கப்பூரில் உள்ள மூத்தோர் நல்ல சுகாதாரத்துடன் நீண்ட நாள் வாழ அது உதவும்,” என்றார் அவர்.

