இரண்டில் ஒரு குடும்பம் அதன் எரிசக்திப் பயன்பாட்டைக் குறைத்தது

இரண்டில் ஒரு குடும்பம் அதன் எரிசக்திப் பயன்பாட்டைக் குறைத்தது

2 mins read
எரிசக்திச் சந்தை ஆணையத்தின் முன்னோடித் திட்டம்
f35e19c9-13d4-42fa-bd0f-99a91296a49f
இவ்வாண்டு செப்டம்பரில் தொடங்கிவைக்கப்பட்ட ‘குடும்ப எரிசக்தி நடவடிக்கை முன்னோடித் திட்டம்’ 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடையும். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வழக்கமாகப் பயன்படுத்தும் எரிசக்தி அளவைக் காட்டிலும் செப்டம்பர் மாதத்தில் 20% குறைவான எரிசக்தியை முன்னோடித் திட்டத்தில் இருந்த சுமார் 500 குடும்பங்கள் பயன்படுத்தின.

உச்சநேரங்களில் எரிசக்தியைக் குறைத்துப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் இந்த முன்னோடித் திட்டத்தின்கீழ் 1,000 குடும்பங்கள் சேர்ந்தன.

தங்களது மின்சாரப் பயன்பாட்டைத் தற்காலிகமாகக் குறைக்கவோ, ஒத்திவைக்கவோ வேண்டும் என ‘எஸ்பி’ குழுமத்தின் செயலி, திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு 15 முறை அறிவிப்புகள் அனுப்பியது.

விருப்ப அடிப்படையில் திட்டத்தில் சேர்ந்தவர்கள் தங்களது வழக்கமான மின்சாரப் பயன்பாட்டு அளவைவிட குறைந்தது 20% குறைத்துப் பயன்படுத்த வேண்டும். மின்சாரத் தேவை அதிகரிப்பைக் குறிக்கும் உச்சநேரமாக இரண்டு மணிநேரம் நீடிக்கும் ‘நேரடி நிகழ்வு’ ஒன்றின்போது இவ்வாறு 20% குறைத்துப் பயன்படுத்துவோருக்கு ரொக்க வெகுமதி வழங்கப்படும்.

எரிசக்தி அதிகம் பயன்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருக்கவோ அவற்றைப் பயன்படுத்துவதைத் தள்ளிப்போடவோ தவறியவர்கள் தண்டிக்கப்படவில்லை.

‘குடும்ப எரிசக்தி நடவடிக்கை முன்னோடித் திட்டம்’ (Household Demand Response Pilot) எரிசக்திச் சந்தை ஆணையத்தாலும் எஸ்பி குழுமத்தாலும் செப்டம்பரில் தொடங்கப்பட்டது. திட்டம் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி முடிவடையும்.

விவேக மின்சார அளவிடல் கருவிகள் பொருத்தப்பட்ட வீடுகள், உச்சநேர எரிசக்தித் தேவை காலத்தின்போது தங்களின் மின்சாரப் பயன்பாட்டை முனைந்து குறைப்பது திட்டத்தின் நோக்கம். மின்சாரத் தடை ஏற்படும்போது தேசிய மின்சாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தை இது குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னோடித் திட்ட முடிவுகளின் அடிப்படையில் எஸ்பி குழுமமும் எரிசக்திச் சந்தை ஆணையமும் எரிசக்தி நடவடிக்கைத் திட்டங்களை மேலும் பல குடும்பங்களுக்கு விரிவுபடுத்தும் சாத்தியத்தை மதிப்பிட இயலும்.

சிங்கப்பூர் அதன் கரியமில வாயு தடத்தைக் குறைக்கும் நோக்கில் அதன் எரிசக்திக் கலவையில் வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறப்படும் எரிசக்தியைச் சேர்க்கத் தொடங்கியுள்ளதால் இத்தகைய முயற்சிகள் முக்கியமானதாக விளங்குகின்றன.

எஸ்பி குழுமம் இதுவரை 900,000 விவேக மின்சார அளவிடல் கருவிகளைக் குடியிருப்புகளிலும் குடியிருப்பு அல்லாத இடங்களிலும் பொருத்தியுள்ளதாக ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அதன் வருடாந்தர அறிக்கையில் குறிப்பிட்டது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் 1.58 மில்லியன் குடியிருப்புக் கணக்குகளிலும் விவேக அளவிடல் கருவிகள் பொருத்தப்படுவதை எதிர்பார்க்கலாம் என்று திறந்த மின்சாரச் சந்தை இணையத்தளம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்