இல்லாததை எண்ணி வருந்தியவர் இருப்பதைக் கொடுத்து மிளிர்கிறார்

இல்லாததை எண்ணி வருந்தியவர் இருப்பதைக் கொடுத்து மிளிர்கிறார்

படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Nov 2026 - 6:45 pm

3 mins read

உளவியல், தத்துவவியல் ஆகிய இரு முதன்மைப் பாடங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வது, 22 வயது லெட்டிஷியா பேவின் அன்றாடப் பணிகளில் ஒரு பகுதி மட்டுமே.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) இறுதியாண்டு மாணவியான இவர், காது கேளாதோருக்குத் தொண்டூழிய நண்பராகச் செயல்படுவதோடு, இரு மாணவர் குழுக்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

மரபணு ரீதியான செவித்திறன் குறைபாடு கொண்ட பேவுக்கு, சமூகத்துக்குத் திருப்பிக் கொடுப்பது என்பது மிகவும் தனிப்பட்ட உணர்வுபூர்வமான ஒன்றாகும். தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதும் மற்றவர்கள் அறியாத வகையில் போராடுவதும் எத்தகைய வலியைத் தரும் என்பதை அவர் நன்கு அறிவார்.

வளரும் பருவத்தில், குடும்பத்தின் நிதிநிலை குறித்துக் கவலைப்பட்டவாறே, தமது மூன்று இளைய உடன்பிறப்புகளைப் பராமரிக்கும் வயதிற்கு மீறிய பொறுப்புகளையும் அவர் சுமக்க வேண்டியிருந்தது.

காது கேட்கும் கருவிகளைப் பயன்படுத்துவது அவருக்கு அதிகப்படியான உணர்வுத் தூண்டலையும் தலைவலியையும் ஏற்படுத்துவதால், அவற்றை எப்போதாவது மட்டுமே அணிந்துகொள்கிறார். மற்றவர்களுடன் உரையாட உதட்டசைவைப் படிப்பதையே அவர் பெரிதும் நம்பியுள்ளார்.

ஆனால், இந்தத் தன்னம்பிக்கை அவரிடம் எப்போதும் இருந்ததில்லை.

சிறுவயதில், வார்த்தைகளைப் புரிந்துகொள்வதில் சிரமப்படுவோம் என்பதை அறிந்திருந்ததால், கேட்டல் கருத்தறிதல் தேர்வுகளைக் கண்டு அவர் பெரிதும் அஞ்சினார்.

அவர் பதிலளிக்காதபோது, பள்ளித் தோழர்கள் அவரைத் திமிர் பிடித்தவர் என்று தவறாக எண்ணினர். வேறு சிலரோ மனதைப் புண்படுத்தும் விதமாகப் பேசினர்.

தொடக்கநிலை ஆறாம் வகுப்பில் கேட்டல் கருத்தறிதல் தேர்வில் தோல்வியடைந்த பின்னரே, அவரது தாயார் அவரைச் செவித்திறன் நிபுணரிடம் அழைத்துச் சென்றார். அப்போதுதான் அவருக்குச் செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

பேவுக்கு 16 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர். குடும்பத்தின் மூத்த மகள் என்ற முறையில், பொறுப்புகளைத் தாமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் உணர்ந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே பெற்றோரிடம் செலவுக்கான பணம் வாங்குவதை நிறுத்திக்கொண்ட அவர், பல்கலைக்கழகப் படிப்புக்காகச் சேமிக்கப் பகுதிநேர வேலைகளைச் செய்தார்.

தமது உடன்பிறப்புகளை, குறிப்பாக ‘டவுன் சிண்ட்ரோம்’ குறைபாடு கொண்ட தமது கடைசித் தங்கையைப் பராமரிக்கவும் அவர் உதவினார்.

நீ அன் பலதுறைத் தொழில்நுட்பக்கல்லூரியில் வடிவமைப்புத் துறையில் பட்டயச் சான்றிதழ் பெற்ற பிறகு, உளவியல் மீதான தமது ஆர்வத்தைத் தொடர அவர் முடிவெடுத்தார்.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில், அவர் சைகை மொழியைக் கற்றுக்கொண்டார்.

பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டில், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ‘காம்லிங்க் பிளஸ்’ திட்டத்தின்கீழ் உள்ள குறைந்த வருமானக் குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த, பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களுடன் நட்புறவு கொள்ள வகைசெய்யும் பாடத்திட்டத்தில் அவர் சேர்ந்தார்.

சைகை மொழி தெரிந்திருந்ததால், காது கேளாத குடும்பம் ஒன்றுடன் தம்மை இணைக்குமாறு பே கேட்டுக்கொண்டார். அதன்படி, வாடகை வீட்டில் வசித்து வந்த காது கேளாத தம்பதியர், அவர்களின் பதின்ம வயது மகன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் காது கேளாதோர் சங்கத்தில் வேலை அனுபவ பயிற்சி பெற்ற அவர், சமூகப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றியதோடு, நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் உதவினார்.

வளரும் பருவத்தின் பெரும்பகுதியில், அவர் தமது சொந்தப் பிரச்சினைகளைப் பற்றியே அதிகம் எண்ணிக்கொண்டிருந்தார். தொண்டூழியம் செய்தது, அவரது கவனத்தைத் தமது சொந்தச் சவால்களிலிருந்து மற்றவர்களின் தேவைகளை நோக்கித் திருப்ப உதவியது.

மாற்றுதிறனாளிகளுக்குச் சேவையாற்றும் அறநிறுவனமான ‘எஸ்பிடி’ நிர்வகிக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பசிபிக் மதுபான ஆலைகள் அறக்கட்டளை உபகாரச் சம்பளத்தை கடந்த அக்டோபர் மாதம் அவர் பெற்றார். இது சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் அவரது இறுதியாண்டுப் படிப்புக் கட்டணத்தை ஈடுசெய்யும்.

குறிப்புச் சொற்கள்