ஒரு வார்த்தையும் ஐந்து வார்த்தைகளும்: நாடாளுமன்றத்தில் அரிய நிகழ்வுகள்

ஒரு வார்த்தையும் ஐந்து வார்த்தைகளும்: நாடாளுமன்றத்தில் அரிய நிகழ்வுகள்

2 mins read
06ec85c4-693c-47d7-90b2-484473738dad
நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங். - கோப்புப் படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

நாட்டின் வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி 12ஆம் தேதி தாக்கல் செய்யப்பட, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு சார்ந்த விவாதத்தில் பல சுவையான நிகழ்வுகள் அரங்கேறின.

அவற்றை விவாதத்தின் நிறைவுநாளான வெள்ளிக்கிழமை (மார்ச் 6) அவையில் குறிப்பிட்டார் நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங். 15வது நாடாளுமன்றத்தின் முதல் வரவுசெலவுத் திட்டம் இது.

இந்த நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் இருப்பதால், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாத நேரம் கடந்த ஆண்டைவிட 12 விழுக்காடு கூடுதலாக இருந்தது.

முதன்முறையாக, இவ்வாண்டு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு சார்ந்த விவாதமும் ரமலான் காலத்திலேயே நடைபெற்றது.

‘‘ஒவ்வோர் அமர்வு நாளிலும் நோன்பு துறப்பு நேரம்வரை பணியாற்றிய சக முஸ்லிம் ஊழியர்களுக்கு நன்றி கூறுகிறேன். வியாழக்கிழமை மாலை அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, நோன்பு துறந்தபோது, தண்ணீர் அருந்திவிட்டு, உடனடியாக நாடாளுமன்றத்தில் உரையை நிகழ்த்தினார்,” என்றார் திரு சியா. அதற்காக, பொதுக் கடமைகளில் அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்காக அவர் பாராட்டு தெரிவித்தார்.

‘முடியாது’ என ஒரு வார்த்தையில் பதிலளித்த அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்;  ‘தயவுசெய்து பறவைகளுக்கு உணவளிக்க வேண்டாம்’ என ஆங்கிலத்தில் ஐந்து வார்த்தையில் பதிலளித்த அமைச்சர் ஆல்வின் டான்; மும்மொழியில் பேசிய அமைச்சர் என்று நாடாளுமன்ற விவாதத்தில் பல அம்சங்கள் முதன்முறையாக இடம்பெற்றிருந்ததையும் மன்ற நாயகர் குறிப்பிட்டார்.

உறுப்பினர்களுக்குப் பிடித்த பாடல்கள், பாடகர்கள் பற்றியும் விவாத உரைகள் வெளிப்படுத்தியதாகக் கூறிய  திரு சியா, விவாதக் காலம் முழுவதும் ஒரே ஒருநாள் மட்டுமே அதிகாரபூர்வ இடைவேளை இருந்தது. மற்ற எல்லா நாள்களிலும் இடைவேளை இல்லாமல் அவையின் பணி தொடர்ந்தது என்றார். 

நாயகர் சாதனை

மேலும், இந்த அமர்வில் ஆறு மணி நேரம், பத்து நிமிடங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததன் மூலம் தாமே ஓர் புதிய தனிப்பட்ட சாதனையைப் படைத்துள்ளதாக மன்ற நாயகர் சியா கூறினார்.

“இந்தச் சாதனையை நான் மீண்டும் ஒருபோதும் முறியடிக்க வேண்டியதில்லை என்று நம்புகிறேன்,’’ என்று கூறி உறுப்பினர்களைப் புன்னகைக்க வைத்தார் அவர்.

“நாடாளுமன்ற உரைகள் என்பது வார்த்தை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. உறுப்பினர்கள் எத்தனை வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்? எவ்வளவு வேகமாகப் பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல.

“அமைச்சின் திட்டங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், கொள்கைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை விளக்குவதற்கும், அனைத்திற்கும் மேலாக, சிங்கப்பூரர்களின் வாழ்க்கை எவ்வாறு மேம்படும் என்பதைத் தெளிவாக எடுத்துரைப்பதுமே முக்கியம்,” என்றார் திரு சியா.

‘‘விவாதத்தின் உண்மையான அர்த்தம் என்பது உடன்பாடு காண்பதில் இல்லை. எப்படி? ஏன்? நாம் வேறுபடுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. இது வெறும் கட்சி ரீதியான கருத்து வேறுபாடு மட்டுமல்ல, ஒரே கட்சிக்குள்ளும் கட்சிகளுக்கு இடையேயும் நாம் கண்ட கருத்துகளின் முரண்பாடு.

“நாம் எட்டும் உடன்படிக்கைகள், உருவாக்கும் சட்டங்களின் புனிதத்தன்மை, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் மேன்மையான அடையாளமாகும்,’’ என்றும் கூறினார் அவர்.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்