தொடக்கநிலை வேலைகளைப் பாதுகாக்க 3,000 மாணவர்களுக்கு ஓராண்டு வேலை அனுபவப் பயிற்சி

தொடக்கநிலை வேலைகளைப் பாதுகாக்க 3,000 மாணவர்களுக்கு ஓராண்டு வேலை அனுபவப் பயிற்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Oct 2026 - 4:53 pm

2 mins read

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால் தொடக்கநிலை வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் மாணவர்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்குள் ஆழமான வேலை அனுபவத்தைப் பெற உதவவும் அடுத்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 3,000 உயர்கல்வி மாணவர்களுக்கு ஓராண்டு கால வேலை அனுபவப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும்.

மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன்பே, கல்வித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மதிப்பீட்டுப் புள்ளிகள் கொண்ட ஓராண்டு வேலை அனுபவப் பயிற்சியை மேற்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவுத் தானியக்கமயமாக்கலால் தொடக்கநிலை வேலைகள் தேவையில்லை என்ற சூழல் உருவாகி வரும் நிலையில், இதனால் ஏற்படும் திறன் இடைவெளியைக் குறைக்க இத்திட்டம் முயல்கிறது.

இதனைத் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 19) பொங்கோலில் அமைந்துள்ள சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களிடையே பேசியபோது தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் தெரிவித்தார்.

பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே புதிய பாலங்களை உருவாக்க இத்தகைய முயற்சிகள் அவசியம் என்றும் நிறுவனங்கள் தங்களுக்கு உடனடியாகப் பங்களிக்கக்கூடிய புதிய ஊழியர்களையே அதிகம் விரும்புகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘சிங்கப்பூர் கணினி மன்றத்தின் டெக் கனெக்ட் 2026’ வருடாந்தர நிகழ்வில் அவர் உரையாற்றினார். இந்நிகழ்வு உயர்கல்வி நிலைய மாணவர்களை என்விடியா போன்ற முன்னணி நிறுவனங்களின் முதலாளிகள், நிபுணர்கள் மற்றும் வழிகாட்டிகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது.

முன்னதாக அக்டோபர் தொடக்கத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்வைத்த அக்கறைகளைத் திரு டான் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டினால் தொழில்துறையின் தொடக்கநிலை வேலைகள் பாதிக்கப்படலாம் என்றும் அதனால் இளையர்களுக்குப் போதிய பயிற்சி கிடைக்காமல் போகலாம் என்றும் பிரதமர் வோங் கூறியிருந்தார். நிறுவனங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி, இளம் ஊழியர்களுக்கு வழிகாட்டுவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

“முன்பெல்லாம் இளம் பொறியாளர்கள் எளிய கணினி ஆணைத்தொடர்களை எழுதுதல், பிழைதிருத்தம் செய்தல், செயலிகளைச் சோதித்தல் போன்ற பணிகளின் மூலமே கற்றுக்கொண்டனர். ஆனால் இப்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமே இத்தகைய தொடக்கநிலைப் பணிகளுக்கு உதவுகிறது,” என்று கூறிய திரு டான், இளம் நிபுணர்களுக்கு இத்தகைய முக்கிய அனுபவங்களையும் தொழில்முறை ரீதியில் முடிவெடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுமாணவர்வேலை அனுபவம்பயிற்சி