ஆகஸ்ட் 4ல் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஓங் பெங் செங்

2 mins read
2e185903-097b-4918-9f40-718a950fbe3e
2024 அக்டோபர் 4ஆம் தேதி ஓங் பெங் செங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. - படம்: பெரித்தா ஹரியான்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுடன் கத்தாருக்குச் சென்றதைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) ஓங் பெங் செங் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவுள்ளார்.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு மே 2023ல் ஒரு தனிப்பட்ட வழக்கைப் புலனாய்வு செய்தபோது இந்த விவகாரம் தற்செயலாக தெரியவந்தது.

ஒரு தனியார் விமானத்தின் உரிமையாளரான ஓங் பெங் செங்கின் பங்காளிகளை புலனாய்வாளர்கள் விசாரித்தபோது அந்த விமானத்தின் பயணிகளின் பட்டியலைக் கண்டனர்.

அந்தப் பட்டியலில், ஓங்கின் நெருங்கிய நண்பரான திரு ஈஸ்வரனின் பெயர் தனித்துத் தெரிந்தது. இருவரும் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர்.

திரு ஈஸ்வரன் ஓங்கின் அழைப்பை ஏற்று, அனைத்துச் செலவுகளையும் ஓங் ஏற்றுக்கொள்ளும் வகையில் 2022 டிசம்பர் 10ஆம் தேதி கத்தாருக்கு இருவரும் ஒன்றாகப் பயணம் செய்தனர்.

இருவரும் தனியார் விமானத்தில் கத்தார் சென்றனர். திரு ஈஸ்வரன் மறுநாள் விமானத்தின் வர்த்தகப் பிரிவு பயணச்சீட்டில் சிங்கப்பூர் திரும்பினார்.

இந்தப் பயணம், லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் தனி விசாரணைக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, சிங்கப்பூரின் வரலாற்றில் முதல்முறையாக, 2024 அக்டோபர் 3ஆம் தேதி ஒரு முன்னாள் அமைச்சர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

பல நீதிமன்ற ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, விமானப் பயணிகளின் பட்டியல் கண்டறியப்பட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, நீதித்துறை செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கத் தூண்டிய குற்றத்திற்காக ஓங் ஆகஸ்ட் 4ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரூ & நேப்பியர் சட்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மூத்த வழக்கறிஞர் கேவிந்தர் புல் உட்பட வழக்கறிஞர்கள் குழு ஒன்று ஓங்கை ஆகஸ்ட் 4ஆம் தேதி பிரதிநிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கை முதன்மை மாவட்ட நீதிபதி லீ லிட் செங் விசாரிப்பார்.

நீதித்துறை செயல்பாட்டுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக ஓங் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்