தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓங் பெங் செங்; ஆகஸ்ட் 15ல் தீர்ப்பு

3 mins read
170397c3-2fbe-4968-a8f0-fb24034e2c50
அரசு நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற ஓங் பெங் செங் (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்புடைய வழக்கில் விசாரணைக்கு இடையூறு விளைவித்த குற்றத்தை பெருஞ்செல்வந்தரான ஓங் பெங் செங் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) ஒப்புக்கொண்டார்.

முகக்கவசமும் கழுத்துக்குட்டையும் அணிந்துகொண்டு 79 வயது ஓங் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

திரு ஈஸ்வரனின் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதக் கத்தார் பயணம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு விளைவித்ததை ஓங் ஒப்புக்கொண்டார்.

அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்க ஊழியரைத் தூண்டிய குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கப்படும்போது கருத்தில் கொள்ளப்படும்.

பாதுகாவல் குழு சூழ்ந்திருக்க திரு ஓங் தமது வழக்கறிஞர்களுடன் காலை 9 மணி அளவில் அரசு நீதிமன்றத்தை அடைந்தார்.

வழக்கு விசாரணை காலை 9.30 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது.

இருப்பினும், தீ எச்சரிக்கை மணி இரண்டு முறை ஒலித்ததால் வழக்கு விசாரணை 10.15 மணி அளவில் தொடங்கியது.

முதன்மை மாவட்ட நீதிபதி லீ லிட் செங் நீதிமன்றத்துக்குள் நுழைந்ததும் தீ எச்சரிக்கை மணி முதல்முறையாக ஒலித்தது.

வழக்கு விசாரணையை நேரில் காண வந்திருந்தோர் நிரம்பியிருந்த நீதிமன்றத்தில், ஏறத்தாழ ஒரு மணி நேரத் தாமதத்துக்குப் பிறகு ஓங் புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விவரங்களைக் கொண்ட அறிக்கையை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் வாசித்தார்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தம்முடன் கத்தாருக்குப் பயணம் செய்ய திரு ஈஸ்வரனுக்கு ஓங் அழைப்பு விடுத்தாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

திரு ஈஸ்வரன் தமது விருந்தினர் என்றும் தம்முடன் தமக்குச் சொந்தமான விமானத்தில் கத்தாருக்குச் செல்லலாம் என்றும் ஓங் அவரிடம் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவக்கப்பட்டது.

தங்குமிடம் உட்பட பயணச் செலவுகள் அனைத்தையும் தாம் ஏற்றுக்கொள்வதாக திரு ஈஸ்வரனிடம் ஓங் தெரிவித்தார்.

ஓங்கின் அழைப்பை திரு ஈஸ்வரன் ஏற்றார்.

பயணத்துக்காகத் திரு ஈஸ்வரன் அவசர விடுப்புக்கு விண்ணப்பம் செய்தார்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதியன்று ஓங்கிற்குச் சொந்தமான விமானத்தில் திரு ஈஸ்வரன் கத்தார் தலைநகர் டோஹாவுக்குப் பயணம் செய்தார்.

விமானப் பயணத்துக்கான செலவு கிட்டத்தட்ட 7,700 அமெரிக்க டாலர் (S$10,410).

டோஹாவில் திரு ஈஸ்வரன் ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் தங்கினார்.

அங்கு ஓர் இரவுக்கான ஹோட்டல் அறைச் செலவு $4,737.63.

விமானப் பயணத்துக்கும் ஹோட்டல் செலவுக்கும் திரு ஈஸ்வரன் பணம் செலுத்தவில்லை என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

ஓங்கின் உத்தரவின்படி ஹோட்டலுக்கான செலவை சிங்கப்பூர் கிராண்ட் பிரீ ஏற்றுக்கொண்டது.

தோஹாவில் ஓர் இரவு தங்கிவிட்டு, திரு ஈஸ்வரன் விமானத்தின் வர்த்தகப் பிரிவில் சிங்கப்பூர் திரும்பினார். அந்தப் பயணத்துக்கான செலவு $5,700. அதற்கான செலவையும் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ ஏற்றுக்கொண்டது.

தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை முன்னாள் போக்குவரத்து அமைச்சரான ஈஸ்வரன் ஒப்புக்கொண்டார். அரசாங்க ஊழியராக இருந்துகொண்டு விலை மதிப்புள்ள அன்பளிப்புகளை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்ட நான்கு குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.

இதையடுத்து, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று அவருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 2024ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதியன்று ஓங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அதையடுத்து, வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடல்கள் பலமுறை நடைபெற்றன. வழக்கு விசாரணையும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியன்று அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தது. ஆனால் ஓங்கின் மருத்துவ அறிக்கையைப் பெற கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறி வழக்கை ஒத்திவைக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

வர்த்தகரான ஓங், ஒருவித ரத்தப் புற்றநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

இதற்கு முன்பு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின்போது மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காகவும் வேலை நிமித்தமாகவும் வெளிநாடு செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜூலை 3ஆம் தேதியன்று அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தது. ஆனால் வழக்கின் தீர்ப்புக்கு முன்பு கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க கூடுதல் நேரம் தேவை என ஓங்கின் வழக்கறிஞர்கள் கூறியதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதற்கிடையே, ஓங் பெங் செங் தொடர்பான வழக்கிற்கு ஆகஸ்ட் 15ல் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருக்கு வழங்கப்பட்ட $800,000 பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குணப்படுத்த முடியாத நோயால் ஓங் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று தங்களுக்குப் புரிவதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஓங்கிற்குச் சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபாரதம் விதிப்பதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்