தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓங் பெங் செங் சிங்கப்பூரிலிருந்து வெளியே செல்ல அனுமதி; கூடுதலாக $800,000 பிணை

1 mins read
e3ff74e5-ee11-4743-b589-004730d501cb
திரு ஓங் பெங் செங் மீது அக்டோபர் 4ஆம் தேதி, பொதுச் சேவை ஊழியருக்கு அன்பளிப்புகள் தந்தது, நீதித்துறைக்கு இடையூறு விளைவித்ததில் உடந்தையாக இருந்தது ஆகியவை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெருஞ்செல்வந்தரான ஓங் பெங் செங் கூடுதல் பிணைத் தொகை செலுத்தினால் சிங்கப்பூரிலிருந்து வெளியே செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

லண்டன், போஸ்டன், ஜிப்ரால்டர், ஸ்பெயின் ஆகிய இடங்களுக்குப் பணி தொடர்பாகவும் மருத்துவ சிகிச்சைக்காகவும் செல்வதற்கு அவர் கூடுதலாக $800,000 பிணை செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதி அவருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திரு ஓங், அக்டோபர் 31ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து வெளிநாடு செல்வார். நவம்பர் 9ஆம் தேதிக்குள் அவர் சிங்கப்பூருக்குத் திரும்பவேண்டும் என்றும் அதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் தனது கடப்பிதழை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பயணத்தின்போதும் விசாரணை அதிகாரிகள் தொடர்புகொள்ளும் நிலையில் அவர் இருக்கவேண்டும் என்பதுடன் தனக்குப் பிணைத்தொகை செலுத்தியவருடன் பயணம் செய்ய அவருக்கு அனுமதி இல்லை.

அக்டோபர் 4ஆம் தேதி, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் தொடர்பான குற்றவியல் வழக்கு விசாரணையில் திரு ஓங்கிற்கு ஏற்கெனவே $800,000 பிணை செலுத்த உத்தரவிடப்பட்டது.

ஓங் மீண்டும் நவம்பர் 15ஆம் தேதி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்.

பொதுச் சேவை ஊழியருக்கு அன்பளிப்புகள் தந்தது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

நீதித்துறைக்கு இடையூறு விளைவித்ததில் உடந்தையாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்