தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓங் பெங் செங் அடுத்த மாதம் குற்றத்தை ஒப்புக்கொள்ளக்கூடும்

2 mins read
b33f2a03-77ad-433f-8270-db8ae2f909c7
பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்புடைய வழக்கில் விசாரிக்கப்படும் பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜூலை 3ஆம் தேதி ஒப்புக்கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திரு ஓங்மீது விசாரணைக்கு இடையூறு விளைவித்தது, அரசாங்க ஊழியரைப் பரிசுகள் வாங்கத் தூண்டியது என இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அது செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

79 வயது ஓங் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், திரு ஓங்கின் வழக்கறிஞர் மருத்துவக் காரணங்கள் கூறிக் கூடுதல் நேரம் கேட்டார்.

சொத்துச் சந்தையின் மன்னன் என்று அழைக்கப்பட்டும் திரு ஓங்மீது 2024ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்மீதான குற்றச்சாட்டு, கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஈஸ்வரனைத் தனது செலவில் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு 20,850 வெள்ளி மதிப்பிலான பயணம் மேற்கொள்ளத் தூண்டியதன் தொடர்பிலானது.

தோஹா சென்ற விமானச் சீட்டுச் செலவு (10,400 வெள்ளி), ஹோட்டல் அறை செலவு (4,737.63 வெள்ளி), சிங்கப்பூருக்குத் திரும்பிய விமானச் சீட்டுச் செலவு (5,700 வெள்ளி) ஆகியவை அவை.

மேலும் அதே பயணத்தின் விவகாரம் குறித்து லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, ஓங் 2023ஆம் ஆண்டு மே மாதம் ஈஸ்வரன், தோஹாவிலிருந்து சிங்கப்பூர் வந்த விமானத்தின் இருக்கைக்காக 5,700 வெள்ளியைத் தமக்குச் செலுத்த துணைபோனார்.

சிங்கப்பூரில் ஃபார்முலா ஒன் (Singapore GP) கார் பந்தயத்தை நடத்தத் தூணாக இருந்தவர் திரு ஓங்.

அண்மையில் திரு ஈஸ்வரன் தனது சிறைத் தண்டனையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்