முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுடன் தொடர்புடைய வழக்கில், ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நீதிபதி லீ லிட் செங் முன்னிலையில் திங்கட்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடலுக்குப் பிறகு இத்தகவல் வெளியிடப்பட்டது.
ஓங் தற்போது $800,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
79 வயது ஓங், ஏப்ரல் 2ல் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தது. ஆனால், அவரது மருத்துவ அறிக்கைகளைப் பெற கால அவகாசம் வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து அது ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பிறகு, ஜூலை 3ஆம் தேதியன்று அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தது. ஆனால் அவரது வழக்கறிஞர்கள் தற்காப்பு வாதங்களைத் தொகுத்துச் சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் பலமுறை நடைபெற்றன.
அன்பளிப்புகளைப் பெற அரசாங்க ஊழியரைத் தூண்டியதாகவும் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியன்று ஓங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஓங் தந்த அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டதும் அதில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று திரு ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

