பெருஞ்செல்வந்தரும் சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ நிறுவனத்தின் தலைவருமான ஓங் பெங் செங் மீது அக்டோபர் 4ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
78 வயது ஒங், $800,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அரசாங்க ஊழியராக இருந்தும் விலை உயர்ந்த பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டதற்காகவும் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் ஈஸ்வரனுக்கு அக்டோபர் 3ஆம் தேதியன்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஓங் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் இந்த வழக்குடன் தொடர்புடையவை.
2017ஆம் ஆண்டு ஃபார்முலா 1 கார் பந்தயத்தின்போது, முக்கிய பிரமுகர்கள் அறைக்கான (Green Room) 10 நுழைவுச்சீட்டுகளை ஈஸ்வரனுக்கு ஓங் தந்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு நுழைவுச்சீட்டின் விலை $4,000க்கும் அதிகம்.
மேலும், 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கத்தார் தலைநகர் டோஹாவுக்கு ஈஸ்வரனை அழைத்துக்கொண்டு ஓங் தமது தனியார் விமானத்தில் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
டோஹாவில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் ஈஸ்வரன் தங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதியன்று அவர் விமானத்தின் வர்த்தகப் பிரிவில் சிங்கப்பூர் திரும்பினார்.
தம்முடன் ஈஸ்வரன் தனியார் விமானம் மூலம் டோஹாவுக்குப் பயணம் மேற்கொண்டது பற்றி லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியவந்ததை அடுத்து, அதுகுறித்து ஈஸ்வரனிடம் ஓங் தெரிவித்தார்.
இது பற்றி தெரியவந்ததும் டோஹா பயணத்துக்கான செலவைக் காட்டும் விலைப் பட்டியலை சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ நிறுவனத்தின் பெயரில் தமக்கு அனுப்பி வைக்குமாறு ஈஸ்வரன் ஓங்கைக் கேட்டுக்கொண்டார்.
2023ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் கிராண்ட் ப்ரீ நிறுவனத்துக்கும் ஈஸ்வரன் $5,700 பெறுமானமுள்ள காசோலையை அனுப்பிவைத்தார்.
இதன்மூலம் ஈஸ்வரன் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும் அதற்கு ஓங் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

