முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் வழக்கில் தொடர்புடைய செல்வந்தரான ஓங் பெங் செங், ஹோட்டல் பிராப்பர்ட்டீஸ் லிமிடெட் (HPL) குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிய ந்துள்ளது.
அந்தக் குழுமத்தின் வருடாந்தர பொதுச்சபைக் கூட்டம் (AGM) ஏப்ரல் 29ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் அந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓங் தமது உடல்நலத்திற்கு அதிக நேரம் செலவிட விரும்புவதாக அந்தக் குழுமம் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தெரிவித்தது.
பொதுச் சபைக் கூட்டத்தில் தாம் மீண்டும் இயக்குநரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான விண்ணப்பம் எதையும் அவர் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிகிறது.
79 வயதாகும் ஓங் சிங்கப்பூரில் ஃபார்முலா 1 கார் பந்தயத்தை 2008ஆம் ஆண்டு கொண்டுவந்தவர் என்று அறியப்படுகிறார்.
அரசாங்க ஊழியர் ஒருவர் பரிசுகளைப் பெறவும் நீதி விசாரணையைத் தடுக்கவும் துணைபுரிந்ததாக 2024 அக்டோபர் 4ஆம் தேதி அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம், ரத்த வெள்ளையணுவில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஒருவகையான நோய்க்கு ஓங் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

