தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏப்ரல் 2ஆம் தேதி ஓங் பெங் செங் குற்றத்தை ஒப்புக்கொள்வார்

2 mins read
8369fb9f-afa6-47e0-bc2f-fa7ac0eeda95
பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங் மீது 2024ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி, பொதுச் சேவை ஊழியர் அன்பளிப்புகள் பெற்றுக்கொள்வதிலும் நீதித்துறைக்கு இடையூறு விளைவித்ததிலும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மீது லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (CPIB) மேற்கொண்ட விசாரணை தொடர்பில் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளைப் பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங் ஒப்புக்கொள்ளவிருக்கிறார்.

பொதுச் சேவை ஊழியர் அன்பளிப்புகள் பெற்றுக்கொண்டதிலும் நீதித்துறைக்கு இடையூறு விளைவித்ததிலும் உடந்தையாக இருந்ததாகக் கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 4ஆம் தேதி ஓங் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

அதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) விசாரணைக்கு முந்திய கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதையடுத்து, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள ஓங் முடிவெடுத்தது குறித்து நீதிமன்றத்தின் வழக்கு நிர்வாக அமைப்பில் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.

ஓங் ஏப்ரல் 2ஆம் தேதி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் சட்டப்பிரிவு 165ன்கீழ், பொதுச் சேவை ஊழியர் ஒருவர் முழுக் கட்டணத்தைச் செலுத்தாமலோ கட்டணமின்றியோ பொருள்களைப் பெற்றுக்கொள்வது குற்றமாகும்.

2022 டிசம்பரில் அப்போதைய அமைச்சர் ஈஸ்வரன் சிங்கப்பூரிலிருந்து கத்தார் தலைநகர் தோஹாவிற்குத் தனியார் விமானத்தில் செல்வதற்குப் பெருஞ்செல்வந்தர் ஓங் ஏற்பாடு செய்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான செலவு 7,700 அமெரிக்க டாலர் (S$10,400) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தோஹாவிலுள்ள ‘ஃபோர் சீசன்ஸ்’ ஹோட்டலில் ஈஸ்வரன் ஓர் இரவு தங்குவதற்கும் (மதிப்பு $4,437.63) தோஹாவிலிருந்து சிங்கப்பூருக்கு வர ‘பிஸ்னஸ்’ வகுப்பு விமானச் சீட்டுக்கும் (மதிப்பு $5,700) ஓங் ஏற்பாடு செய்திருந்தார்.

அத்துடன், அந்த விமானப் பயணம் தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்தது குறித்து ஈஸ்வரனுக்கு ஓங் தகவல் அளித்ததாகவும் கூறப்பட்டது.

ஈஸ்வரன் மீதான வழக்கு தொடர்பில் ‘சிபிஐபி’ விசாரணைக்கு அழைத்த பல்வேறு தரப்பினரில், சிங்கப்பூரில் இரவுநேர ‘ஃபார்முலா ஒன்’ (F1) கார்ப் பந்தய ஏற்பாட்டாளரான ஓங்கும் அடங்குவார்.

ஓங்கிடமிருந்து அதிக விலை மதிப்பிலான பொருள்களைப் பெற்றுக்கொண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் தொடர்பில் சென்ற ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி ஈஸ்வரனுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னதாக, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீது மொத்தம் 35 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றில் பெருஞ்செல்வந்தர் ஓங்கிற்கும் தொடர்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்