சொத்து மேம்பாட்டாளர் ஓங் பெங் செங் வழக்கு தொடர்பான வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் ஜூலை 23ஆம் தேதி மீண்டும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நடைபெற்ற நிலையில் அது மீண்டும் இம்மாதம் 23ஆம் நடைபெறும் என்று தற்பொழுது கூறப்பட்டுள்ளது. அவருடைய வழக்கு முன்னாள் போக்குவரத்து அமைச்சர் திரு ஈஸ்வரனின் வழக்குடன் தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) நீதிமன்ற விசாரணை இருதரப்பும் திருத்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக என நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன. எனினும் இது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
திரு ஓங் பெங் செங்கிற்கு 79 வயது ஆகிறது. அவர் இதற்கு முன்னர் ஜூலை 3ஆம் தேதி தம்மீதான குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசு, தற்காப்பு என இரு தரப்பினரும் விதிக்கப்படக்கூடிய தண்டனை தொடர்பாக தங்கள் இறுதி வாதங்களை சமர்ப்பிப்பதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திரு ஓங் முதன்முதலாக ஏப்ரல் 2ஆம் தேதி குற்றங்களை ஒப்புக்கொள்வதாக இருந்தது. அவருடைய உடல்நலன் தொடர்பான மருத்துவ அறிக்கைகளைப் பெற வழக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரு ஓங் பெங் செங் மீது, பொதுச் சேவை ஊழியர் பரிசுப் பொருள் பெற உதவியது, சட்டம் தன் கடமையைச் செய்வதில் இடையூறு விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

